Tuesday 21 April 2020

தேவனிடத்தில் அன்புகூருவது என்றால் என்ன? பிறரிடத்தில் நாம் அன்பு செய்வது குறித்து,தேவன் நமக்கு எவ்விதமாக கட்டளையிட்டு இருக்கின்றார்?

தேவனிடத்தில் அன்புகூருவது என்றால் என்ன?

பிறரிடத்தில் நாம் அன்பு செய்வது குறித்து,தேவன் நமக்கு எவ்விதமாக கட்டளையிட்டு இருக்கின்றார்?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
நம்முடைய பரலோகத் தகப்பன்,எப்படி பூரண சற்குணராய் இருக்கிறாரோ,
அதே போல நாமும் பூரண சற்குணர்களாக இருக்க வேண்டும்,என்று இயேசு நமக்கு போதித்து இருக்கின்றார் (மத் 5:48) நம்முடைய தகப்பனாகிய தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று வேதம் போதிக்கின்றது (1யோவா 4:8) அன்பென்பது பூரண சற்குணத்தின் பண்பு,அந்த இறையியல் பண்பாகிய அன்பை,தரித்தவர்களாக இந்த உலகத்திலே,நாம் இருக்க வேண்டும்
(கொலோ 3:14).எப்படி ஒரு ஆடையோடு உடலை இணைத்து கட்ட பெல்ட் என்னும் கச்சை பயன்படுத்தப்படுகிறதோ
அதே போல தேவனின் பூரண சற்குணம் என்னும் தெய்வீகப் பண்போடு,நம்மை இணைத்து கட்டக்கூடிய கட்டுதான் அன்பு.
நம்முடைய தேவன் அன்பாகவே இருக்கிறார் அதனால் நாமும் மற்ற மனிதர்களிடத்தில் அன்பாக இருக்க வேண்டும் (1யோவா 4:8) நம்முடைய தேவன் நல்லோர்,தீயோர் நீதியுள்ளவர்,
அநீதியுள்ளவர் என்ற பாரபட்சமின்றி,
அனைவரையும் நேசிப்பது போல்,(மத் 5:45) நாமும் மற்ற மனிதர்களை பாரபட்சமின்றி நேசிக்க வேண்டும்,என்று வேதம் போதிக்கின்றது

தேவன் மனிதனுக்கு கொடுத்த கட்டளைகள் எல்லாம் அன்பிற்குள்ளே அடங்கி இருக்கின்றது (மத் 22:36-40)

அன்பு என்பது இயேசுவின் சீஷர்களின் சிறப்பியல்பு,நாம் இயேசுவின் சீஷர்கள் என்பதை மற்றவர்களிடம் நாம் செலுத்துகிற  அன்பே வெளிப்படுத்தி காட்டுகிறது (யோவா 13:34-35)

மற்றவர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டியது என்பது,நாம் செலுத்த வேண்டிய #கடன் அதாவது தேவனிடத்தில்,
நாம் பெற்றுக்கொண்ட, அன்பின் கடனை,மற்ற மனிதர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும் (ரோம 13:8)

நாம் மிகப்பெரிய வல்லமையுடைய,
வரங்கள் பெற்ற மனிதராக இருந்தாலும்,
மலையை பேர்க்கத்தக்க விசுவாச வீரனாக இருந்தாலும்,தானதர்மங்கள் செய்கின்ற,
தாராள பிரபுவாக இருந்தாலும்,நம்முடைய உடலயே சுட்டு எரிக்க கொடுக்கின்ற தியாகியாக இருந்தாலும்,நம்மிடத்தில் அன்பு,என்கிற பண்பு இல்லையேல்,
அதனால் நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை (1 கொரி 13:1-3)

#தேவனிடத்தில் #அன்புகூருவது என்றால் #என்ன?

தேவனிடத்தில் அன்பு கூருவது,என்பது அவருடைய கட்டளைகளைக் கடைபிடித்து வாழுதல்,அவருடைய வார்த்தையின் வழியில்,நமது வாழ்க்கையை,அமைத்துக்
கொள்ளுங்கள் என்பதே ஆகும்.என்ஜின்
இல்லாமல் எப்படி பைக்கை ஓட்ட முடியாதோ! பேட்டரி இல்லாமல் எப்படி மொபைல் போனை யூஸ் பண்ண முடியாதோ! அதேபோல தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் நாம் அவரிடத்தில், அன்பு கூற முடியாது.
(யோவா 14:23)(1யோவா 5:3) (2யோவா 1:5)
கிறிஸ்துவின் உபதேச சட்டத்திற்கு நாம் மனபூர்வமாய் கீழ்ப்படிந்ததினாலே இன்று நாம் இரட்சிக்கப்பட்டு இருக்கின்றோம் (ரோம 6:17-18 )நாம் உண்மையாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களாக இருந்தால் அவருடைய கற்பனைகளை நிச்சயமாக நாம் கடைபிடிப்போம்,

#பிறரிடத்தில் நாம் #அன்பு செய்வது குறித்து,தேவன் நமக்கு #எவ்விதமாக #கட்டளையிட்டு #இருக்கின்றார்?

1)உங்கள் எதிரிகளை,நேசியுங்கள் அவர்களுக்கு,நன்மை செய்யுங்கள் உங்கள் பரமபிதா,இரக்கம் உள்ளவராக இருப்பது போல,நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.(லூக் 6:35-36)

2)உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்,உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும்,
உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.(மத் 5:44)

3)உங்கள் எதிரி,பசியாய் இருந்தால் அவனுக்கு உணவு கொடுங்கள்,
உங்கள் எதிரி தாகமாய் இருந்தால் அவனுக்கு தண்ணீர் கொடுங்கள்.(ரோம 12:20)

4)மற்றவர்களுக்காக உயிரையே கொடுக்கிற அளவுக்கு,மேலான அன்பு கொண்டவர்களாக, இயேசு கிறிஸ்துவைப்போல தியாக உள்ளம் கொண்டவர்களாக,நாம் இருக்க வேண்டும்.(யோவா 15:13)(1யோவா 3:15-16)

5)மற்ற மனிதர்கள்,உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ (அதாவது) மற்றவர்களிடத்தில், நீங்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை நீங்கள் அவர்களுக்கு செய்யுங்கள்.(லூக் 6:31)

6)ஒருவன் தேவனிடத்தில் அன்புகூருகிறவனாக,இருந்தால்,தன் சகோதரனிடத்திலும் அவன் அன்பு கூறுகிறவனாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் அவன் பெய்யன்
(1யோவா 4:20)

7)நாம் வழி விலகிப் போகும் போது,
நம் மீது அன்பாய் இருக்கிற,கர்த்தர் நம்மை கடிந்து கொண்டு,கண்டித்து சிட்சித்து,நல்வழிப்படுத்தி நடத்துகிறாரோ,
அதே போல,(எபி 12:6)நாமும்,சத்திய வசனத்திற்குகீழ்ப்படியாமல்,
போகிறவர்களை,சத்துருக்களாக எண்ணாமல் சகோதரர்களாக,எண்ணி அவர்களுக்கு,புத்தி சொல்ல வேண்டும்.
(2 தெச 3:14-15 )(நீதி:13:24)

8)சகோதரர்களுக்கு,ஆறுதல் கூறி அவர்களை,மன்னித்து அன்பை காட்ட வேண்டும்.(2 கொரி 2:6-7)

9)தேவ அன்பில் நிலைத்திருக்கிற ஒருவன்,தன் சகோதரன் வறுமையிலே,
குறைச்சலிலே,இருக்கும் பொழுது,
அவனுக்கு கொடுத்து உதவி செய்ய வேண்டும்,வெறும் வசனத்திலும் வார்த்தையினாலும்அல்ல,
கிரியையினாலும்,உண்மையினாலும்,
அவனிடத்தில் அன்பை வெளிப்படுத்தி காட்டி அவனுக்கு உதவி செய்ய வேண்டும்.(1யோவா 3:17-18)

10)நாம் அன்பிலே ஏவப்பட்டு மற்றவர்களுக்கு சுவிசேஷம் என்கிற சத்தியத்தை பிரசங்கிக்க வேண்டும்
(பிலி 1:17) ஏனென்றால்,அன்பானது சத்தியத்தில் சந்தோஷப்படும்(1கொரி 13:6) சிலர் இரட்சிக்கப்படும்படியாக,அவர்கள் நிலைக்கு,நாம் இறங்கி போய்யாவது,
அவர்களை கிறிஸ்துவுக்கு
ஆதாயப்படுத்திக் கொள்ள பிரயாசப்பட வேண்டும் (1 கொரி 9:22)

11)நாம் சுயநலவாதிகளாய்,
நமக்குரியவைகளையே,நாம் நோக்கி கொண்டிருக்காமல்(அதாவது நம்முடைய தேவை,வளர்ச்சி...)நாம் பிறர் நலவாதிகளாய், மற்றவர்களுக்குரியவைகளை  நோக்கிக்கொண்டு இருக்க வேண்டும்
(பிலி 2:1,4)

12)கிறிஸ்து சபையை அன்பு கூருவது போல,கணவன் தன் மனைவியை தன்னுடைய சொந்த,சரீரமாக பாவித்து அன்பு கூற வேண்டும்.கணவனானவன்
தன்னை அன்புகூருவது போல,தன் மனைவியினிடத்திலும் அன்புகூர வேண்டும்.(எபே 5:25,28,33)

13)மனைவி கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல,தன் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் எப்படி சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதோ அதேபோல் மனைவியும் தன் கணவனுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.(எபேசியர் 5:22,24)(தீத்து 2:5)

14)கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டியாக இருக்கிற,நாம் அன்பிலே ஒருவரையொருவர் தாங்கி,ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து நமக்கு மன்னித்ததுபோல,
ஒருவருக்கொருவர் நாமும் மன்னிக்க வேண்டும்.(கொலோ 3:10,13) (எபே 4:2)

15)நாம்,சாப்பிடுகிற உணவு ஒரு சகோதரனுடைய விசுவாச வாழ்க்கையை கெடுப்பதாகவோ, அல்லது அவனுக்கு விசனத்தை உண்டாக்க கூடியதாகவோ இருக்கக்கூடாது,அது அவனுக்கு இடறலுண்டாக்க கூடாது,அவ்வாறு இருந்தால்,அவன் மீது கொண்ட அன்பின் காரணமாக அப்படிப்பட்ட உணவுகளை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் (1 கொரி 8: 9-13)( ரோமர் 14:15)

16)நீங்கள் செய்யக்கூடிய எந்த காரியமாக இருந்தாலும் அதை அன்பிலே செய்யுங்கள்
(1 கொரி16:14)

17)கிறிஸ்து இயேசுவுக்குள் உள்ள அனைவரையும் அன்பென்னும் முத்தத்தோடு வாழ்த்துங்கள்( 1 பேது5:14)

18)பரிசுத்தவான்களுக்கு உதவி செய்தல்,ஊழியம் செய்தல்,
அவர்களுக்கு கொடுத்து உதவுதல்,
குறைச்சலை நீக்குதல் ஆகியவை,
தேவன் மீது நாம் வைத்திருக்கிற
அன்புள்ள பிரயாசம்,அதை தேவன் மறக்க மாட்டார்.(ரோம 12:13)(எபி 6:10)

பிரியமானவர்களே!
நியாயத்தீர்ப்பு நாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக
அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது;
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும் ஏனென்றால், அவர் இருக்கிற பிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம் என்று வேதம் சொல்கிறது (1 யோவா 4:17-18)அவர் எவ்வாறு இருக்கிறார்? என்கிற கேள்விக்கு பதில்,அவர் அன்பாகவே இருக்கிறார்,(1யோவா 4:8)அந்த தேவ அன்பு நமது இருதயத்தில் ஊற்றப்பட்டு இருக்கிறது (ரோம5:5) நம்மில் ஊற்றப்பட்ட தேவ அன்பை தேவ ஆவியானவரின் துணை கொண்டு,செயல்படுத்துவோம்,
பாரபட்சமின்றி அனைவரையும்,அன்பு செய்வோம்,மன்னிப்போம், இரக்கம் காட்டுவோம்,ஆதரிப்போம்,
அரவணைப்போம்,இயேசுவுக்கு
சாட்சியாக வாழுவோம்.

ஆமென்... அல்லேலூயா...

ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்;(1 பேதுரு 1:22)

இப்பொழுது விசுவாசம்,நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.

(1 கொரிந்தியர் 13:13)
******************************
போதகர்:மார்வெல் ஜெரோம்
கல்வாரி ஜீவவழி ஊழியங்கள்
பொங்களூர்-இந்தியா


No comments:

Post a Comment