Thursday 29 July 2021

இயேசுவே நமது முன்மாதிரி

 


#இயேசுவே #நமது #முன்மாதிரி


கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமானவர்களே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, மனுக்குலத்திற்கு தேவனால் கொடுக்கப்பட்ட முன்மாதிரி 

வாழ்க்கை முறையாக இருக்கிறது

இயேசுவைப் போலவே நாம் வாழவேண்டும் இயேசுவைப்

போலவே,நாம் மாற வேண்டும் என்பதற்காகத்தான் தேவன் நம்மை

முன் குறித்து அழைத்திருக்கிறார்.

(ரோம் 8:29) வேதம் சொல்கின்றது....

நாம் இயேசுக்கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை தொடர்ந்து 

பின்பற்றி வரும்படி அவர் 

நமக்கு மாதிரியை வைத்து போயிருக்கின்றார்.(1 பேது 2:21) கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பார்க்க வேண்டும் 

(எபி 3:1) அவர் நடந்தபடியே நாமும் நடக்க வேண்டும் (1 யோவா 2:6 ) ஏனென்றால் நாம் இந்த இருள் நிறைந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும்,எப்படி செயல்பட 

வேண்டும் என்பதற்கான,

முன்மாதிரி வாழ்க்கை முறையை அவர் நமக்கு வாழ்ந்து காண்பித்து இருக்கிறார்(யோவா 8:12)

(யோவா 13:15)


அன்பு செலுத்துவதில் இயேசு நமது முன்மாதிரி: 


ஒருவன் தன் சிநேகிதருக்காகத் 

தன் ஜீவனைக் கொடுக்கிற 

அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை என்று சொன்ன இயேசு (யோவா 15:13)

நாம் தேவனுக்கு சத்துருக்களாக இருக்கையில் (ரோம :5:10)

இயேசு நம்மை சிநேகித்தார்,

நமக்காக தன்னுடைய ஜீவனையே கொடுத்தார்,அவர் நம்மில் அன்புகூர்ந்து அதுபோல நாமும் அன்பிலே நடந்து கொள்ள வேண்டும் என்று வேதம் சொல்கிறது (எபே 5:2)


தன்னை மறுதலித்தவர்களையும், ஆபத்திலே தன்னை விட்டு விட்டு 

ஓடிப்போனவர்களையும்,இயேசு கடைசிவரை நேசித்தார் அவரின் அன்பு மாறவே இல்லை 


"தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே,முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்"

(யோவான் 13:1)


எனவே இயேசு கிறிஸ்துவை போல நாமும் நம்மை பகைவர்களையும் நிந்திக்கிறவர்களையும்,நமக்கு துரோகம் செய்கிறவர்களையும்,

நம்மை வெறுக்கிறவர்ளையும் நேசிப்போம்,அவர்கள் மீது 

இறுதிவரை அன்பு மட்டுமே செலுத்துவோம்,இப்படிப்பட்ட 

அன்பின் தன்மை கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும் என்று தான் தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்


மனத்தாழ்மையில் இயேசு நமது முன்மாதிரி:


இயேசு சொல்கின்றார்,நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள் (மத் 11:29)


கொஞ்சம் அறிவு,பணம்,படிப்பு,

திறமை இருந்தால் தன்னை கடவுளுக்கு சமமாக பாவித்து கொள்ளும்,அழிந்து போகும் தன்மை உடைய மனிதர்கள் மத்தியில் மனித உருவில் வந்த கடவுள் ஆகிய இயேசு

தன்னைத்தானே தாழ்த்தினார் வெறுமையாக்கினார்,அரியணையை விட்டு இறங்கி,அடிமையின் ரூபமெடுத்து,தனது தாழ்மையின் சுபாவத்தை நமக்கு வெளிப்படுத்தி காட்டியிருக்கின்றார்


சிலர் தன்னை தாழ்த்துவது போல் பேசுவார்கள்,அவருடைய செயல்கள் அப்படி இருக்காது,பெருமை உள்ளதாக இருக்கும், ஆனால் இயேசுவின் செயல் அப்படி அல்ல,யோவான் 13 இல் நாம் வாசிக்கிறோமே இயேசு தனது சீடர்களின் பாதங்களை கழுவுகிறார் இது அவரின் மனத்தாழ்மையான செயல்பாட்டிற்கு ஒரு அடையாளம் 

இயேசுவின் சிந்தனை,சொல்,

செயல் அனைத்தும் மனத்தாழ்மை நிறைந்ததாகவே இருந்தது,

அவர் கடவுளுக்கு சமமாக இருந்தாலும் அதை மேன்மையாக எண்ணாமல் தன்னைத்தானே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து,சிலுவை மரணத்தை ஏற்கும் படியாக தன்னைத்தானே தாழ்த்தினார்.

எனவே தான் தேவன் அவரை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தினார்,(பிலிப்பியர் 2:5) சொல்கிறது கிறிஸ்து இயேசுவிலிருந்த 

சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;


மன்னிப்பதில் இயேசு நமது முன்மாதிரி:


தன்னுடைய மரணத் தருவாயில் கூட தன்னை துன்பப்படுகிறவர்கள் இயேசு மன்னித்தார்,அதோடு மட்டுமல்லாமல் அவர்களை தேவன் மன்னிக்கும் படியாக,பிதாவே இவர்களை மன்னியும் என்று அவர்களுக்காக வேண்டுதலும் செய்தார் (லூக் 23:34)

வேதாகமம் நம்மையும் அவரைப் போலவே மன்னிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது


"கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல,ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்"(கொலோ 3:13)


"மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்".(மத் 6:14)


மனதுருக்கத்தில் இயேசு நமது முன்மாதிரி: 


மக்களுக்கு நல்வழி காட்ட இயேசு மனதுருகினார்: 


இயேசு கரையில் வந்து,அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.(மாற் 6:34)


நோயாளிகள் படும் வேதனையைப் பார்த்து மனதுருகி அவர்களை குணமாக்கினார்:


"இயேசு வந்து, திரளான 

ஜனங்களைக் கண்டு,அவர்கள்மேல் 

மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்".(மத் 14:14)


மரித்துப்போன ஒரே மகனின் சடலத்தோடு பாடிக்கு பின்னே அழுது கொண்டு சென்ற விதவைத் தாயின் மீது இயேசு மனதுருகி உதவி செய்தார்

அவனை உயிரடையச் செய்தார்:

(லூக் 7:14-15)


இயேசுவைக் கொலை செய்ய பிடிக்க வந்த பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின்,வெட்டப்பட்ட காதை இயேசு மனதுருகி ஒட்ட வைத்தார் (லூக் 22:50-51)


எனவே நாமும் இயேசுவை அறியாத மக்களை கண்டால் அவர்கள் மீது மனதுருகி அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்து அவர்களை நல்வழிப்படுத்த

வேண்டும்,வியாதியஸ்தர்களுக்காக  

நாம் ஜெபிக்கவும்,அவர்களை இயேசுவின் நாமத்தினால் குணமாக்கவும் விசுவாசத்தோடு செயல்படவேண்டும்,

பாவத்தினாலும்அக்கிராமத்தினாலும்,

மரித்து கிடக்கின்றவர்களை,

தேவனுடைய வார்த்தையை அறிவித்து அவர்கள் உயிர்மீட்சி அடையவும் உயிர் அடையவும் செய்ய வேண்டும்.


நன்மை செய்வதில் இயேசு நமது முன்மாதிரி: 


மற்றவர்களுக்கு நன்மை செய்வதையே தன்னுடைய இயல்பாக ஏற்றுக் கொண்டிருந்தார், எல்லோருக்கும் பாரபட்சமின்றி நன்மை செய்யுங்கள் என்று போதித்தார் (லூக் 6:35) 

தீமை செய்தவர்களுக்கும் 

நன்மை செய்யும்படியாக 

கட்டளையிட்டார்: (மத் 5:44)

தன்னை எதிர்த்த எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் கூட அவர் 

நன்மை செய்தார்,ஒருவருக்கும் 

அவர் தீமை செய்யவே இல்லை


அப்போஸ்தலர் 10:38 சொல்கிறது

அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார் என்று அவருடைய முழுநேர வேலையே மற்றவர்களுக்கு நன்மை செய்வதுதான்,

நாமும் கூட நன்மை செய்வதற்காகத்தான் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக பிடிக்கப்பட்டு தேவனுடைய செய்கையாக இருக்கின்றோம் இருக்கின்றோம் 

(எபே 2:10) எனவே நன்மைகள் மாத்திரம் செய்வதே நம்முடைய முழுநேரப் பணியாக இருக்கட்டும்


சுயத்தை வெறுப்பதில் இயேசு நம்முடைய முன்மாதிரி: 


இயேசுவினுடைய பேச்சும் பிரசங்கமும் அவரின் சுயத்தில் இருந்து வந்ததல்ல

பிதாவினிடத்தில் இருந்து வந்தது,

அவர் சுயமாக எதையும் பேசாமல் பிதா அவருக்கு போதித்த படியே அவர் பேசினார்,போதித்தார் (யோவா 8:28)

எனவே நாம் சுயத்தில் இருந்து, பிரசங்கத்தில் ஏதாவது பேசாமல் தேவன் நமக்கு போதித்த வேத வாக்கியங்களின் அடிப்படையில் பேச வேண்டும் 

பிரசங்கிக்க வேண்டும்.


இயேசு தனது சுயத்தை வெறுத்தது போல நாமும் நம்முடைய சுயத்தை வெறுத்து  நமது சிலுவையை எடுத்துக் கொண்டு அவரை பின்பற்றி வரவேண்டும் 

(மாற்கு 8:34)


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சுயமாக எல்லாவற்றையும் செய்யும் அதிகாரமும் சுதந்திரமும் வல்லமையும் உடையவராக இருந்தாலும், அவர் சுயமாக எதுவும் செய்யவில்லை சுயமாக எதுவும் பேசவில்லை, அது மட்டுமல்ல ஒரு மனிதனாக இந்த பூமிக்கு சுயமாக வரவில்லை மாறாக பிதாவே அவரை அனுப்பினார்,பிதா அனுப்பி அவர் 

வந்தார்(யோவா 12:49-50) அவர் தன்னுடைய சித்தத்தை செய்யவில்லை பிதாவினுடைய சித்தத்தை செய்தார் (யோவா 5:30) எனவே நமக்கு எதையும் செய்யவும், எதையும் பேசவும் நமக்கு அதிகாரம் இருந்தாலும்,தேவன் நமக்கு சொல்லுகிறதை பேசவும்,தேவன் நமக்கு கட்டளையிடுகிறதை

செய்கிறவர்களாக நாம் இருக்க

 வேண்டும்.(யோவா 7:18) இல் 

இயேசு சொல்கின்றார்....


"சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான்,

தன்னை அனுப்பினவரின் 

மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான்"

என்று...


இயேசு தனது செயல்பாடுகளின் 

மூலம் ஒருபோதும் சுய மகிமையை தேடவில்லை,பிதாவை மகிமைப்படுத்தும் படியாகவே நாடினார்.. எனவே நாமும் நம்முடைய செயல்பாடுகளின் மூலம்,சுய மகிமையை தேடாமல் தேவனை மகிமைப்படுத்த வேண்டும்.


இயேசு தன்னுடைய வாழ்க்கையில் எல்லா பகுதியிலும் தன்னை முன்னிலைப்படுத்தாமல்,தனது பிதாவே முன்னிலைப்படுத்தி அவருடைய நாமம் மகிமைப்படும்படி ஒவ்வொன்றையும் செய்தார் என்பது அவர் சுயத்தை எவ்வளவு வெறுத்து செயல்பட்டு இருக்கிறார் என்பதை நம்மை உணர வைக்கின்றது..


உண்மையில் நாம் சுயத்தை வெறுக்கிற மனிதர்களாக இருந்தால் நம்முடைய வாழ்க்கையில்,இயேசுவை முழுமையாக பிரதிபலிக்க முடியும், நாம் நமக்கான சுய அடையாளங்களை அதாவது

கோபக்காரன், பிடிவாதக்காரன்

சண்டைக்காரி,வாயாடி,என்கிற சுயத்தை அழிக்கும் போது தான் கிறிஸ்துவை நம்மால் வெளிப்படுத்த முடியும்,


"அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.(யோவா 3:30)"


தீண்டாமைக்கு எதிரான நடவடிக்கையில் இயேசு நம்முடைய முன்மாதிரி : 


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இடத்திலிருந்து நாம் கற்கவேண்டிய அடுத்த பண்பு,அவர் தீண்டாமைக்கு எதிரானவர்,யூதர்கள் தங்களை மிகவும் உயர்ந்தவர்களாகவும் மற்றவர்களை மிகவும் கீழான வர்களாகவும் எண்ணினார்கள், ஆகையால் யூதரல்லாதவர்களை, திருமணம் செய்தவர்களை புறக்கணித்து 

அவர்களை சமாரியர்கள் என்று அழைத்தார்கள்,யூதேயா மாகாணத்திலிருந்து கலிலேயா மாகாணத்திற்கு செல்ல வேண்டுமென்றால்,சமாரியா வழியாககடந்து செல்வதை தவிர்த்து 

சுற்றி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் சமாரியர்களை யூதர்கள் தீட்டாக கருதினார்கள்.


ஆனால் ஆண்டவர் இயேசு அதை உடைத்தெறிய சமாரியாவின் வழியாக

சென்றார்,அதுமட்டுமல்ல சமாரியாவிலே,இரண்டு நாள் தங்கி அவர்களுக்கு போதனையும் செய்தார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தீண்டாமைக்கு எதிராக தீயை ஆண்டவராகிய இயேசு பற்றவைத்தார்

(யோவா 4:4-43)


தேவனிடத்தில் பாரபட்சம் இல்லை

எந்த மனிதனாக இருந்தாலும் அவன்

நன்மை செய்தால் அதற்குரிய 

பலனும், அவன் தீமை செய்தால் அதற்குரிய தண்டனையும் உண்டு 

இதில் இனப்பாகுபாடு,மொழிப் பாகுபாடு,நிறப்பாகுபாடு என

எந்தவித பாகுபாட்டையும் தேவன் பார்ப்பதில்லை.


பொல்லாங்குசெய்கிறவனுக்கு

உபத்திரவமும் வியாகுலமும், நன்மை செய்தவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும் (ரோமர் 2:9-11)


அவருக்கு முன்பாக நாம் அனைவரும் சமமே உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்பதை பிறப்பு அல்ல குணமே தீர்மானிக்கும் என்று வேதம் போதிக்கின்றது 


"எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்".(அப் 10:35)


தேவனோடு உறவாடுவதில் இயேசு நமது முன்மாதிரி 


யோவான் 8:16 இல் இயேசு சொல்கின்றார்......


"நான் நியாயந்தீர்த்தால்,என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்;ஏனெனில்

நான் தனித்திருக்கவில்லை,நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்."


இயேசு பிதாவோடு தனித்து உறவாடுவதில் தலைசிறந்தவராய் இருந்தார்,பிதா தந்த பொறுப்புகளை நிறைவேற்றிக் கொண்டே தனிப்பட்ட உறவில் பிதாவோடு நெருக்கமாக வாழ்ந்தார்,பொறுப்புகளை காரணம் காண்பித்து, பிதாவோடு நேரம் செலவழிப்பதை அவர்  தவிர்க்கவில்லை...பகல் நேரம் முழுவதும் ஊழியம் செய்துவிட்டு 

இரவு முழுவதும் ஜெபித்தார்..

(லூக்கா 6:12)


வேலைப்பளுவை நான் காரணம் காட்டி,வேதம் வாசிப்பதையும்,ஜெபம் செய்வதையும் நாம் விட்டு விட்டு 

அதை தவிர்க்கிறோம்,ஆனால் இயேசு தேவனோடு உறவாட மிகவும் 

பிரியப்பட்டார், அதிகாலையிலே வெளிச்சம் வருவதற்கு முன்பாகவே இயேசு எழுந்து ஜெபிக்கிறவராய் காணப்பட்டார் (மாற்கு 1:35)


ஆகையால் தான் இயேசு சொல்கிறார் நான் தனித்திறன் பிதா எப்போதும் என்னோடு இருக்கிறார், அவருக்கு பிரியமானவர்களே நான் செய்கிற படியால் அவர் என்னை தனித்திருக்க விடவில்லை (யோவா 8:29)


எனவே நாம் தேவன் நமக்கு கொடுத்த ஊழியத்தை, வேலையை காரணம் காட்டி அவரோடு உறவாடுவதை தவிர்க்காமல் இயேசுவைப் போல

பிதாவோடு அதிகமாய் ஐக்கியம் கொள்வதை ஆர்வமாய் நாடுவோம்.


சவால்களை சந்திப்பதில் இயேசு நமது மாதிரி:


மத்தேயு 26:46 இல் இயேசு சொல்கின்றார்..."என்னைக் காட்டிக்கொடுக்கிறவன்,இதோ,வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம்"


இயேசு சவால்களைக் கண்டு பயந்து நடுங்க வில்லை,அவர் தைரியமும் விசுவாசம் உள்ளவராக இருந்தார்

எபிரெயர் 12:2 சொல்கிறது...

"அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து,தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்."


ஆகையால் தான் நமது வாழ்வில் சவால்களை பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பொழுது

ஏதோ புதுமை என்று அதாவது யாருக்கும் வராதது எனக்கு வந்துவிட்டது,என்று நான் பயந்து விடாமல் அதை துணிந்து எதிர் கொள்ள வேண்டும்,அந்த சவால்களை பிரச்சனைகளை இயேசுவைப் போல மேற்கொண்டு ஜெயிக்க வேண்டும்.

என்று தேவனுடைய வார்த்தை 

நம்மை உற்சாகப்படுத்துகிறது


"பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,

கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்"

(1 பேதுரு 4:12-13)


நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடமிருந்து இன்னும் அனேக காரியங்களை முன்மாதிரியாக நாம் கற்றுக்கொள்ள முடியும்,ஏனெனில் அவரே நமக்கு பூரணமான முன்மாதிரியாக இருக்கின்றார்,அவரது அடிச்சுவடுகளை பின்பற்ற நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் 

(1 பேது 2:21) அவரை கவனித்து பார்த்து (எபி 3:1) அவர் நடந்தபடியே நடக்கிறவர்களாக என்றும் 

இருப்போம் (1யோவா 2:6)


ஆமென்... அல்லேலூயா...


Pas.Marvel Jerome 

Calvary Living Way Ministries

Mobile number: 9677819582 







கொள்ளை நோயினால், உலகமக்கள் அழிந்து போகிறது போல் உன்னதமானவரின் மக்களும் அழிந்து போவதற்கான காரணங்கள் என்ன?

கொள்ளை நோயினால்,
உலகமக்கள் அழிந்து போகிறது போல் உன்னதமானவரின் மக்களும் அழிந்து போவதற்கான காரணங்கள் என்ன?

அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்,அந்தகாரத்திலே நடக்கிறார்கள்;தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம்
அசைகிறது.நீங்கள் தேவர்கள்
என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள்
என்றும் நான் சொல்லியிருந்தேன்.
ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து,லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து
போவீர்கள்.(சங்கீதம் 82:5-7)

சங்கீதம் 82:5-7-ல்... கர்த்தர் தன்னுடைய ஜனங்களைப் பார்த்து சொல்லுகிறார்.....
நீங்கள் தேவர்கள்,உன்னதமானவரின் மக்கள் இதை நீங்கள்,அறியாமலும் உணராமலும் இருந்து அந்தகாரத்தில் நடந்து,உலக மனிதனைப்போல
செத்து,லோகபிரபுக்களின்
ஒருவனைப் போல விழுந்துபோவீர்கள்
(அதாவது) தேவ ஜனங்கள் தாங்கள்
யார் என்பதை,தாங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம்
என்பதை,அறியாமல் உணராமல்
இருந்தால்,அந்தகாரத்தில்
நடந்தால் சாதாரண உலக
மனிதர்களைப்போல,
அவர்களும் மடிந்து போவார்கள்
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இறைமக்கள்,இவ்வுலக மக்களைப்
போல மடிந்து,அழிவதற்கான
காரண காரியங்கள்,இங்கே சொல்லப்பட்டிருக்கிறதை
நாம் பார்க்கின்றோம்,

1) தேவ ஜனங்கள் அறிவில்லாமல் அழிகின்றார்கள்.

2) தேவ ஜனங்கள் அந்தகாரத்தில் நடப்பதினால் அழிகின்றார்கள்.

என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள் (ஓசியா 4:6)

இன்று கொரோனா என்கிற,
கொள்ளை நோயினால்,உலக
ஜனங்கள் செத்துபோகிறது
போல,உன்னதமான தேவனுடைய
ஜனங்களும்,செத்துபோகிறார்கள்,
வியாதியில் விழுந்து நோய்வாய்ப்பட்டு மரிக்கிறார்கள்,பிரியமானவர்களே
நாம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்,கிறிஸ்துவுக்குள் இருக்கும் நமக்கு உலகத்தாருக்கு நடப்பதுபோல,
நடக்க வேண்டிய அவசியமில்லை
ஏனென்றால்,நாம் உலகத்தார் அல்ல
(யோவா 17:16) கர்த்தர் நமக்கு
வாக்கு கொடுத்திருக்கின்றார்,
என் ஜனங்களுக்கும்,உன்
ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்
(யாத் 8:23) எகிப்தியருக்கு
வரப்பண்ணின வியாதியை
உனக்கு வர பண்ண மாட்டேன்
(யாத் 15:26) உன் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதித்து,
வியாதியை உன்னை விட்டு
விலக்குவேன்(யாத் 23:25)
பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்புவிப்பேன் (சங் 91:4)
நீடித்த நாட்களால் நானுன்னை திருப்தியாக்கி என் இரட்சிப்பை,
உனக்கு காண்பிப்பேன் (சங் 91:16)
என்று தேவன் நமக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்,இவைகளை
நாம் விசுவாசித்து பெற்றுக் கொள்ள வேண்டும்,நான் உன்னதமானவரின் மறைவிலிருக்கிறேன், சர்வவல்லவருடைய நிழலில்
தங்கி இருக்கிறேன்,என் பக்கத்தில் ஆயிரம்பேரும்,என்  வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும்,
அது என்னை அணுகாது.(சங் 91:1,7)
நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.(சங்118:17)
என்கிற விசுவாசமான நிலையிலே
தேவ ஜனங்கள் எப்பொழுதும் இருக்க வேண்டும், விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்கிற வார்த்தையின்படி
(ஆபகூக் 2:4)(எபி 10:38) இந்த
கொள்ளை நோய் காலத்திலே நம்மால், சாகாமல் பிழைத்திருக்க முடியும்.

2) தேவ ஜனங்கள் அந்தகாரத்தில் நடப்பதினால் அழிகின்றார்கள்.

நீதிமான் தன் நீதியைவிட்டுத்திரும்பி, அநியாயஞ்செய்தால்,அவன் அதினால் சாவான்.(எசேக்கியேல் 33:18)

தேவ ஜனங்களுக்கு விசுவாசம்
எவ்வளவு முக்கியமோ, அதேபோல நன்னடத்தையும்,பரிசுத்த வாழ்வும்,
மிகவும் முக்கியம், நாம் இந்த
உலகத்தார் போல வாழக்கூடாது, தேவனுடைய வார்த்தையின்
நாம் படி வாழ வேண்டும்.(ரோம 12:2)
நாம் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறோம்,
(மத் 5:14) எனவே வெளிச்சத்தின்
பிள்ளைகளைப் போல நாம்
நடந்து கொள்ள வேண்டும் (எபே 5:8)
அறிவின்மை,அழிவை  கொடுக்கிறது தங்களுடைய தேவன் யார்
என்பதையும்,தாங்கள் தேவனுடைய சொந்த ஜனங்கள் ஆக இருக்கின்றோம் என்பதையும்,தங்களுடைய சிந்தனை, பேச்சு,நடக்கை,வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் குறித்த சரியான அறிவின்மையால்,தேவ ஜனங்கள் அந்தகாரத்தில் நடந்து, அழிகின்றார்கள்,சங்காரமாகின்றார்கள்.

(ⅰ) நம்முடைய சிந்தனை எப்படி இருக்க வேண்டும்:

கர்த்தருடைய வசனங்களை இரவும் பகலும்,மனதில் வைத்து அசை போட்டுக் கொண்டிருக்கின்ற,தியான சிந்தனை நமக்கு இருக்க வேண்டும் (சங் 1:2) (யோசு1:8) உண்மையான,ஒழுக்கமான நீதியான,கற்புள்ள,அன்பான,
நற்கீர்த்தியான,புண்ணியமான,
புகழான காரியங்களை நாம் சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும்
(பிலி 4:8) கிறிஸ்து இயேசுவில் இருந்த அதே சிந்தனை நமக்குள் இருக்க வேண்டும் (பிலி 2:5)(1கொரி 2:16)

(ⅰⅰ) நம்முடைய பேச்சு எப்படி இருக்க வேண்டும்:

கிருபை பொருந்தினதாயும் உப்பால்,
சாரமேறினதாயுமிருக்க வேண்டும்
(கொலோ 4:6)கெட்ட வார்த்தைகளை பேசாமல் கேட்பவர்களின், பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தைகளை
பேச வேண்டும் (எபே 4:29)
சபிக்கிற வார்த்தைகளை
நாம் பேசக்கூடாது. (யாக் 3:8-12)
அனைவரையும் ஆசீர்வதிக்கிற வார்த்தைகளை,நாம் பேச
வேண்டும் (1பேது 3:9)சகோதரர்கள்,
மீது குற்றம்சாட்டி கொண்டே
இருக்கிற குணம் பிசாசின் குணம்,
அந்த குணம் நமக்கு இருக்க கூடாது.
(வெளி 12:10) மற்றவர்களை குற்றவாளிகள் என்று நாம்
தீர்த்து பேசக்கூடாது (ரோம 14:4)
(மத் 7:1-2) உங்களுக்கு கொடுக்கப்பட்ட
வேலையை,ஊழியத்தை மாத்திரம் செய்து,நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம்
என்று கர்த்தரிடத்தில் தாழ்மையாய் பேசுங்கள்.(லூக்கா 17:10)

இயேசுவை போல,நம்முடைய
வாயிலே வஞ்சனை இல்லாத வார்த்தைகள் காணப்பட
வேண்டும் (1 பேது 2:22)

(ⅰⅰⅰ) நம்முடைய நடக்கை எப்படி
இருக்க வேண்டும்:

நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு
நமக்குள் இருந்த கெட்டுபோகிற
பழைய மனிதனின் சுபாவத்தை களைந்துபோட்டு,கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டியாக இருக்கிற புதிய மனிதனின் சுபாவத்தை தரித்துக் கொண்டு வாழ வேண்டும்.
(எபே 4:22-24) நம்மை அழைத்த
தேவன் பரிசுத்தராக இருப்பது போல,நாமும் நம்முடைய நடக்கையில் எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்(1 பேது 1:15)(2 பேது 3:11)
புறஜாதிகள் முன்பாக தேவனின் மகிமைக்காக,நல்நடத்தை கொண்டவர்களாக நாம்,இருக்க
வேண்டும்.(1 பேது 2:12) போதனையே,இன்றி மற்றவர்களை
இரட்சிக்கப்பட வைக்க கூடிய வகையிலேயே நம்முடைய நடக்கை ஒழுக்கமாகவும்,கற்பு உள்ளதாகவும் இருக்க வேண்டும்.(1 பேது 3:1-2)
நம் நிமித்தம்,சத்தியமார்க்கம், தூசிக்கப்பட்டு விடக்கூடாது
எனவே நாம் நல்நடக்கை கொண்டவர்களாக,இருக்க
வேண்டும்.(2 பேது 2:2) நாம்
அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்துகொள்ள வேண்டும் (எபே 4:1)(அப் 26:17-18)

(ⅰv) நம்முடைய வாழ்க்கை முறை
எப்படி இருக்க வேண்டும்:

நாம் உலகத்தில் இருந்து வேறு பிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும்
மற்றவர்கள் படும் உபத்திரவத்தில் அவர்களுக்கு உதவி செய்யும்,நற்குணம்
கொண்டவர்களாகவும், நற்கிரியைகளை செய்பவர்களாகவும் (எபே 2:10)
(கொலோ 1:10) உலகத்தால் கறைபடாத தூய்மையான வாழ்க்கை வாழ்கிறவர்களாகவும் நாம்
இருக்க வேண்டும் (யாக்கோபு 1:27)

விபசாரம்,அசுத்தம்,மோகம்,
துர்யிச்சை,விக்கிரகாராதனையான பொருளாசை இவைகள் நமக்குள் காணப்படவும் கூடாது,இவைகளின் பேர்முதலாய் நமக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது,
பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி
நம்முடைய வாழ்க்கை
முறை இருக்க வேண்டும்
(கொலோ 3:5)(எபேசியர் 5:3)

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாத,திருமண வாழ்வு
இருளோடு ஐக்கியம் கொள்ளாத,
சமூக வாழ்வு (2 கொரி 6:14)
விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட
உணவை உண்ணாமை (அப் 15:20)
(1கொரி 10:20) கொண்ட
வித்தியாசமான தேவ
ஜனங்களாக நாம் இருக்க
வேண்டும் (எஸ் 3:8)

எல்லாவற்றிலும் இச்சையடக்கம் கொண்டவர்களாக நாம் இருக்க
வேண்டும், அழிவில்லாத
ஜீவ கிரீடத்தை அடைய,
நம்முடைய சரீரத்தை ஒடுக்கி சுயக்கட்டுப்பாடோடு,நம்முடைய
வாழ்க்கை என்னும் பந்தயத்தில்
ஓட நாம் வேண்டும் (1 கொரி 9:24-27)

ஒளியிலே இருக்கிறேன்,என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும்
இருளிலே இருக்கிறான்,தன் சகோதரனைப் பகைக்கிறவன்
இருளிலே இருந்து இருளிலே
நடக்கிறான்,என்று
வேதம் சொல்கிறது
(1 யோவா2:9-11)
இருளிலே (அதாவது)
அந்தகாரத்திலே
நடக்கிறவர்கள் சாதாரண
உலக மனிதர்களைப்போல,
மடிந்து போவார்கள்
(சங்கீதம் 82:5,7)எனவே
கிறிஸ்துவுக்குள் தேவன்
நம்மை மன்னித்தது போல்
எல்லோரையும் மன்னிப்போம்
(எபே 4:32) வெளிச்சத்தின்
பிள்ளையாய் நடப்போம்
(எபே 5:8)

நாம் தேவனுடைய சாயலில்படி
ரூபத்தின் படி,படைக்கப்பட்ட
தேவர்களாக இருந்தாலும்,
உன்னதமானவரின் மக்களாய் இருந்தாலும்,நமக்கு அறிவில்லாமல் இருந்தால்,அந்தகாரத்தில்
நடந்தால் அழிவு நிச்சயம், உலக மக்களுக்கு நடப்பது போல் நமக்கும் நடக்கும்,ஆனால் நாம் யாரென்கிற
அறிவு,விசுவாச உணர்வு நம்முடைய சிந்தனை, பேச்சு,நடக்கை,வாழ்க்கை
முறை வேதத்தின் படி இருக்கும்
பொழுது,உலக மனிதர்களுக்கு
நடக்கிறது போல் நமக்கு நடக்காது.
நாம் உன்னதமானவரின் மறைவிலிருப்போம்,சர்வவல்லவருடைய நிழலில் தங்கி இருப்போம்,நம்
பக்கத்தில் ஆயிரம்பேரும்,நமது வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது நம்மை
அணுகாது, நம் தேவனாகிய
கர்த்தர் நம்மோடு கூடவே இருப்பார்,எகிப்தியருக்கு
வரப்பண்ணின வியாதியை
நமக்கு வர பண்ண மாட்டார்
நம் அப்பத்தையும் தண்ணீரையும்
ஆசீர்வதித்து,வியாதியை நம்மை
விட்டு விலக்குவார்,பாழாக்கும்
கொள்ளை நோய்க்கு
தப்புவிப்பார்,நீடித்த நாட்களால்
நம்மை திருப்தியாக்கி அவரின் இரட்சிப்பை,நமக்கு காண்பிப்பார்,

இந்த பூமியிலே கொரோனாவோ வேறெந்த,கொள்ளை நோயோ,
பூகம்பமோ நிலநடுக்கமோ,
இயற்கை சீற்றங்களோ
எது வந்து எப்படிப்பட்ட அழிவுகளை ஏற்படுத்தினாலும்,உலக
ஜனங்கள் அழிந்து போகிறது
போல,உன்னதமான தேவனுடைய
ஜனங்களாகிய நாம்,அழிந்து போகிறது இல்லை, நாம் சாவாமல்,பிழைத்திருந்து,
கர்த்தருடைய செய்கைகளை
விவரிக்கிறவர்களாய் நிச்சயமாக இருப்போம்.ஆமென்..அல்லேலூயா..

கர்த்தர்தாமே நீங்கள் வாசித்த
இந்த வார்த்தைகளின்படி,
சிந்திக்க,விசுவாசிக்க,நடக்க
பெலன் தருவாராக.

******************************

Pas.Marvel Jerome
Clw Ministries
Mobile number: 086675 01353

********************************



நான் உங்களைச் சிநேகிதர் என்றேன்,
ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
(யோவான் 15:15)

பிரியமானவர்களே! இந்த உலகத்திலேயே உங்களை நேசிக்கின்ற சகோதர சகோதரிகளும் அவர்களை விட உங்களை சிநேகிக்கின்ற  சிநேகிதர்களும் அநேகர் உங்களுக்கு இருக்கலாம் (நீதி 18:24)
ஆனால் அவர் எல்லோரையும் விடவும் உங்களை அதிகமாக நேசிக்கின்ற ஒரு சினேகிதர் ஒருவர் உங்களுக்கு உண்டு
அவர்தான் நம்முடைய கர்த்தராகிய
இயேசு கிறிஸ்து அவர் நமக்கு ஆண்டவரும் இரட்சகர் மட்டுமல்ல,
அவர் நமது சிநேகிதரும் உற்ற
நண்பனாய் இருக்கின்றார்,ஒருவன்
தன் சிநேகிதருக்காகத்  தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான
அன்பு ஒருவரிடத்திலுமில்லை என்று
சொன்ன இயேசு (யோவா 15:13)
அவருடைய சிநேகிதர்களாகிய,
நமக்காக தன்னுடைய ஜீவனையே கொடுத்தார், இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால்,நாம் தேவனுக்கு
நண்பர்களாய் இருக்கும் போது
அல்ல,நாம் தேவனுக்கு சத்துருக்களாக இருக்கையில் (ரோம :5:10)
இயேசு நம்மை சிநேகித்தார்,
நமக்காக தன்னுடைய
ஜீவனையே கொடுத்தார்.

சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்.(நீதிமொழிகள் 17:17)

இவ்வுலக உறவுகளும் நட்புகளும் பெரும்பாலும் நாம் வாழ்ந்து இருக்கும்பொழுது நம்மை நேசிப்பார்கள் நாம் தாழ்ந்து இருக்கும் பொழுது நம்மை வெறுப்பார்கள்,நல்ல பொருளாதார நிலைமையில்,நற்பெயரோடு நாம் இருக்கும் போது நம்மை அனேகர் சிநேகிப்பார்கள்,நம்முடைய வாழ்வில் கஷ்டமும் நஷ்டமும் நற்பெயருக்கு களங்கமும் ஏற்படும் நேரங்களில்,
நம்மை அவர்கள் சிநேகிக்க
மாட்டார்கள், நாம் ஏதாவது தவறு
செய்து விழுந்துவிட்டால்,நம்மை தூக்கவோ தாங்கவோ,அவர்கள்
முன்வர மாட்டார்கள்,தங்கள்
கௌரவம் போய்விடும் என்று
நம்மை விட்டு விலகி விடுவார்கள்,ஆனால்
நம்முடைய ஆத்ம நேசர்,நாம்
உளையான சேற்றில் விழுந்து
கிடந்தாலும் அவர் நம்மை தூக்குகிறவராகவும்,தனது கரத்தினால் நம்மை தாங்குகிறவராகவும் கன்மலையின்மேல் நம்மை நிறுத்தி உயர்த்துகின்றவராயும் இருக்கின்றார்
(சங்கீதம் 40:2)(சங்கீதம் 37:24)

இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களிலே
தன்னை மறுதலிக்க போகிறவர்களையும், ஆபத்திலே தன்னை விட்டு விட்டு
ஓடிப்போக போகிறவர்களையும், கடைசிவரை நேசித்தார் அவரின்
அன்பும் சிநேகமும் மாறவே இல்லை
(யோவான் 13:1) சொல்கிறது...
"தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே,முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்

ஆம் எனக்கு அன்பார்ந்தவர்களே!
நாம் வாழ்ந்து இருக்கும்போதும்,
அவர் நம்மை சிநேகிப்பார், நாம்
தாழ்ந்து இருக்கும் போதும்,அவர்
நம்மை சிநேகிப்பார்,நாம் விழும்
போதும் இயேசு நம்மை சிநேகிப்பார்,
நாம் திரும்பி எழும்போதும் இயேசு
நம்மை சிநேகிப்பார்,அவர் ஒருவரே
நம்மை எல்லாக் காலத்திலும்
சிநேகிக்கின்ற சிநேகிதர்.

நீதிமொழிகள் 19:4 சொல்கிறது.
"செல்வம் அநேக சிநேகிதரைச்
சேர்க்கும்;தரித்திரனோ தன் சிநேகிதனாலும் நெகிழப்படுவான்"

நம்மிடத்தில் பணம் இருக்கும் பொழுது பாசத்தோடு பழக பல நண்பர்கள் வருவார்கள், நம்மிடத்தில் ஆஸ்தியும் அந்தஸ்தும் இருக்கும்பொழுது அன்போடு
ஐக்கியம் கொள்ள அனேக சிநேகிதர்கள் வருவார்கள், ஆஸ்தியும் அந்தஸ்தும் பணமும்,பலமும் நம்மை விட்டுச் சென்று விட்டது என்றால் நெருங்கிய நண்பர்கள் கூட நம்மை நெருங்க மாட்டார்கள்,
நம்மிடத்தில் பணம் இருக்கும் பொழுது நம்மை புகழ்வார்கள்,நம்மிடத்தில் பணம் இல்லை என்றால் நம்மை இகழ்வார்கள்.
இது உலக வழக்கம்,ஆனால் நம்முடைய ஆத்ம நேசராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பணத்தை பார்த்தோ,
நல்ல குணத்தை பார்த்தோ,
நம்மை அவர் சிநேகிக்கவில்லை,
நம்மிடத்தில் நல்லதென்று சொல்ல ஒன்றுமில்லை,அவர் நல்லவராக,
கிருபை உள்ளவராக இருப்பதினால் நம்மைச் நேசிக்கின்றார்.

இவ்வுலக சிநேகிதர்கள் ஐசுவரியனாய் இருக்கின்ற மனிதர்களை
தரித்திரர்களாக்கி விடக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றது.
கெட்ட நண்பர்களால்
ஆஸ்தியும் அந்தஸ்தயும் இழந்து தரித்திரரான அநேகர் நம்மை சுற்றி உண்டு,ஆனால் நம்முடைய பரலோக சிநேகிதராகிய இயேசு, நம்மை ஐசுவரியவான்களாக்கும் படியாக
அவர் தரித்திரர் ஆனார்.(2 கொரி 8:9)

நல்ல ஆரோக்கியமாய் இருக்கின்ற மனிதனை கூட,ஒரு சில சிநேகிதர்கள்
கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி,
அவனை நோயாளி ஆகக் கூடிய சூழ்நிலைகள் இங்கு காணப்படுகின்றன,
ஆனால் நம்முடைய ஆருயிர் சிநேகிதராகிய,இயேசு கிறிஸ்து நம்முடைய பலவீனங்களையும்,நம்முடைய நோய்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டு கல்வாரி சிலுவை சுமந்து தீர்த்தார்.
நம்மை குணமாக்கும் படி அவர் நம்முடைய வியாதிகளை தன்மீது ஏற்றுக்கொண்டார்
அவருடைய காயங்களால் இன்று நாம் குணமாகி இருக்கிறோம் (ஏசா 53:4-5)
(மத் 8:17) (1பேது 2:24)

நம்மோடு வாழ்கிற உறவுகள்,நம்மோடு இருக்கிற நண்பர்கள்,நம்மோடு பயணிக்கிற சிநேகிதர்கள்
மரணத்தினாலோ (அல்லது) வேறு ஏதாவது சந்தர்ப்பத்தினாலோ நம்மைவிட்டு பாதியிலே பிரிந்து போகக்கூடிய நிலைமைகள் இந்த பூமியிலே இருக்கின்றது,அவர்கள்
எல்லா நாட்களிலும்  நம்மோடு கூட
இருக்க முடியாது,ஆனால் நம்முடைய நித்திய உறவும் நித்திய சிநேகிதருமாகிய இயேசு கிறிஸ்து,உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நம்மோடுகூடவே இருக்கிறார்
(மத்தேயு 28:20)

(யாக்கோபு 2:23) இல் நாம் படிக்கிறோம்,
ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான்,
அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.
இன்று ஆபிரகாமின் சந்ததி ஆகிய
நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் நாமும்
தேவனுடைய சிநேகிதர்களாய் இருக்கின்றோம்,பிதா நம்மைச் சிநேகிக்கிறார்.(யோவான் 16:27)

கட்டாயத்தின் அடிப்படையில்
அல்ல,(ஓசியா 14:4-6) சொல்கிறது
இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிப்பதினால்,தேவன் நம்மை மனப்பூர்வமாய் சிநேகிக்கின்றார், அதனால் நம்முடைய சீர்கேட்டையெல்லாம் குணமாக்கி இருக்கின்றார், நம் மேலிருந்த
அவருடைய கோபம் நீங்கி போயிற்று,
இன்று தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலர்களாகிய நமக்கு
அதாவது கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமாகிய நமக்கு (உபாகமம் 33:29)
பனியை போல் இருக்கின்றார்
(அதாவது) நம் மீது தயவாய்
இருக்கின்றார், பனி என்பது
தயவை குறிக்கின்றது (நீதி19:12)

எனவே நாம் லீலிப் புஷ்பத்தைப்போல் மகிழ்ச்சியாய் மலருவோம்;
லீபனோனின் மரம் போல் அசையாமல் வேரூன்றி நிற்போம்,நம்முடைய வாழ்க்கை,ஆவிக்குரிய ஜீவியம்,
குடும்பம்,ஊழியம் பொருளாதாரம்
பிள்ளைகளின் எதிர்காலம் ஆகிய 
நம்முடைய அனைத்து கிளைகளும்
ஓங்கிப் படரும்,நம்முடைய
அலங்காரம் (பரிசுத்த அலங்காரம்/சங்:29:2) ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும்,
நம்முடைய வாசனை
(தேவனை அறிகிற அறிவு/2கொரி 2:14)
லீபனோனுடைய வாசனையை
போலவும் இருக்கும், இந்த பாக்கியங்களுக்கு எல்லாம்
காரணம் இயேசு நம்மை
சிநேகிப்பதுதான், அவருடைய
சிநேகம் எவ்வளவு உண்மையானது
தெரியுமா?

நமக்கு ஒரு வாதையும் பிரச்சினையும் வந்து விட்டால்,நம்முடைய நண்பர்களும் சிநேகிதர்களும் நம்மை விட்டு விலகி விடுவார்கள்,நம் உறவினர்களும்,
இனத்தாரும் நம்மோடு கூட இருக்கமாட்டார்கள் (சங்கீதம் 38:11)
இது எதார்த்தமான உண்மைதான்,
ஆனால் நம்முடைய சினேகிதராகிய, இயேசு கிறிஸ்து நம்மோடு கூடவே எப்பொழுதும் இருக்கின்றார் வாதையோ,பிரச்சனையோ போராட்டமோ எதுவாக இருந்தாலும் அவர் நம்மை விட்டு விலகாமலும்,அவர் நம்மை கை
விடாமலும் இருக்கின்றார்,
(உபா 31:6,8)(யோசு 1:5)(எபி 13:5)

அதுமட்டுமல்ல,தேவனோடு சஞ்சரித்த,தேவனோடு நடந்த
தேவனுக்கு பிரியமாயிருந்த,
ஏனோக்கை தேவன் எப்படி
மரணத்தைக் காணாமல்
உயிரோடு எடுத்துக் கொண்டாரோ
(ஆதி 5:24)(எபி 11:5) அதேபோல
அவரோடு சஞ்சரிக்கின்ற,
அவரோடு நடக்கின்ற அவரால்
சிநேகிக்கப்படுகின்ற,
நம்மையும் அவர் அவருடைய
வருகையில் எடுத்துக் கொள்வார்
(யோவா 14:3)(2தெச 2:1)
(1தெச 4:17)

மரித்துப்போன தன்னுடைய சிநேகிதனான லாசருவை இயேசு உயிரோடு எழுப்பினார்
(யோவான் 11:11,43-44)
ஒருவேளை இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு முன்பாக நாம் மரித்தோம் என்றால், அவருடைய சினேகிதர்களாகிய,நம்மையும்
அவர் உயிரோடு எழுப்புவார்
(யோவா 6:44)(1கொரி 6:14)
(2கொரி 4:14)

ஆம் எனக்கு அன்பான சகோதர சகோதரிகளே! நாம் யாரை அதிகமாக
சிநேகிக்கிறோமோ,அவர்களோடு அதிக நேரம் செலவிடவேண்டுமென்று,
நாம் விரும்புவோம் ஆசைப்படுவோம்,
இயேசு உங்களை மிகவும் அதிகமாய் சிநேகிக்கிறார்,நீங்களும் அவரை அதிகமாய் சிநேகிக்கிறீர்களா?
அவரோடு அதிகநேரம் உறவாடுங்கள் அவரோடு அதிகநேரம் ஐக்கியம் கொள்ளுங்கள், நாம் யாரோடு அதிகமாய் பழகுகிறோமோ,அவருடைய சுபாவம், அவருடைய தன்மைகள் எல்லாம், நம்முடையதாக மாறிவிடும்,
தேவன் நம்மை முன்குறித்ததற்கான  காரணம்,தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின்,சாயலைப் போல் நாம் முழுமையாக மாறுவதற்கு என்று
வேதம் சொல்கிறது (ரோம 8:29) (ரோம12:2)(பிலி 2:5) எனவே நம்முடைய ஆத்ம நேசரும்,உற்ற சிநேகிதரும்,
நம்முடைய மூத்த சகோதரனும்,
நமது மனவாளனுமாகிய,இயேசு கிறிஸ்துவினிடத்தில்,அதிகமாய் உறவாடுவோம்,அவரைப்போல் நாம் மாறுவோம்.

நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும்.
(யோபு 22:21)

ஆமென்... அல்லேலூயா...

*********************************

கவனத்திற்கு:

நான் உங்களுக்குக் கற்பிக்கிற
யாவையும் நீங்கள் செய்வீர்களானால்,
என் சிநேகிதராயிருப்பீர்கள்.
(யோவான் 15:14)

நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.
(1 யோவான் 5:3)

விபசாரரே,விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
(யாக்கோபு 4:4)

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.ஏனெனில், மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
(1 யோவான் 2:15-17)

*********************************

Pas.Marvel Jerome
Calvary Living Way Ministries
Mobile number: 9677819582