Friday 16 April 2021

#இயேசு #கிறிஸ்துவின் #இரகசிய #வருகையும்,#பகிரங்க #வருகையும் (பாகம் 1)

 #இயேசு #கிறிஸ்துவின் #இரகசிய #வருகையும்,#பகிரங்க #வருகையும்


ரமேஷ்: இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை மற்றும்,பகிரங்க வருகையை குறித்து,இறைமக்கள் மத்தியில் ஒரு சரியான புரிதல் இல்லாமல் இருக்கின்றது.


சுரேஷ்: ஆமா நண்பா ஒரு சில 

மக்கள் இரகசிய வருகை இல்லை, இயேசுவின் பகிரங்கமான இரண்டாம் வருகை மட்டுமே உண்டு என்கிறார்கள். ஒரு சில மக்கள் இரகசிய வருகை முடிந்து விட்டது என்கிறார்கள்,ஒரு சில மக்கள் உபத்திரவ காலத்திற்குப் பிறகுதான் இரகசிய வருகை வரும் என்கிறார்கள்.


ரமேஷ்: அது அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கை நண்பா! ஆனால் நமது நம்பிக்கை வேதாகமத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். அதுதான் சரியான நம்பிக்கை.


சுரேஷ்: ஆம் நண்பா வேதத்தின்படி இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையையும்,அவருடைய பகிரங்க வருகையையும் நாம் நம்புகின்றோம்.

ஏனோக்கு மரணத்தை காணாமல் எடுத்துக்கொள்ளப்பட்டது, விசுவாசிகள் இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையின் போது உயிரோடு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான முன் அடையாளம் (எபி:11:5) 

இரகசிய வருகை இருக்கிறது,

ஆனால் என்னுடைய கேள்வி என்னவென்றால்,இரகசிய வருகை என்பது உபத்திரவ காலத்திற்கு முன்பா அல்லது பின்பா எப்பொழுது நடக்கப் போகிறது ? இதற்கு எனக்கு வசனத்தின் அடிப்படையில் நீ விளக்கம் தேவை நண்பா... 


ரமேஷ்: விளக்கம் தருகின்றேன்... இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை என்பது உபத்திரவ காலத்திற்கு முன்பு நடக்கப்போற 

ஒரு காரியம், உபத்திரவ காலம் வருவதற்கு முன்பே,இயேசு வந்து நம்மை அவரோடு சேர்த்துக் கொள்வார் (யோவான் 14:3)

(2 தெசலோ2:1)


சுரேஷ் : ஓ! அதனாலதான் அப்.பவுல் 

இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையை குறித்து எழுதும் போது 

1 தெசலோ 1:10-ல் இவ்வாறாக எழுதுகிறாரா? "இனிவரும் கோபாக்கினையினின்று 

நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்" என்று...


ரமேஷ்: ஆமா நண்பா அது மட்டும் கிடையாது "பிலதெல்பியா"சபைக்கு ஆவியானவர் சொல்லும்பொழுது இவ்விதமாக சொல்கின்றார்..

வெளி 3:10-ல் "என் பொறுமையைக்குறித்துச் 

சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், 

பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்" என்று....ஆக சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகுதான் கோபாக்கினையின் காலம் (1 தெசலோ 1:10) சோதனையின் காலம்(வெளி 3:10) அதாவது உபத்திரவ காலம்,இந்த பூமியிலே ஆரம்பமாகும்.. 


சுரேஷ்: ஓ அதனாலதான்  வெளிப்படுத்தின விசேஷதத்தில் 4-ஆம் அதிகாரம் முதல் 18-ஆம் அதிகாரம் வரை சபை என்கிற வார்த்தையே இல்லையா ? 


ரமேஷ்: ஆமா நண்பா! 

வெளிப்படுத்தின விசேஷதத்தில் 4-ஆம் அதிகாரம் முதல் 18-ஆம் அதிகாரம் வரை,சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு உபத்திரவ காலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை பற்றியதாய் இருக்கிறது.இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையின் போது எடுத்துக்கொள்ளப்பட்ட சபையின் ஜனங்கள்,பரலோகத்தில் இருக்கிறதையும்,புதிய பாட்டை பாடுவதையும் நாம் (வெளி 5:9-10)-ல் நாம் பார்க்கிறோமே!


சுரேஷ்: இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கும், இயேசு கிறிஸ்துவின் பகிரங்க இரண்டாம் வருகைக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை சுருக்கமாக சொல்லு நண்பா ! 


ரமேஷ்: சொல்கிறேன் கேள் நண்பா ! 


1) இரகசிய வருகையில்,இயேசு கிறிஸ்து பரிசுத்தவான்களுக்காக வருவார் (1தெச 4:16-17)


இரண்டாம் வருகையிலேயே,இயேசு கிறிஸ்துவை பரிசுத்தவான்களோடு  வருவார் (யூதா 1:15) 


2) இரகசிய வருகை என்பது பூமியிலிருந்து பரிசுத்தவான்கள் வானத்துக்கு எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி (மத் 24:27,30,40,41) 

(1தெச 4:14,16,17)


இரண்டாம் வருகை என்பது பரிசுத்தவான்களோடு, இயேசு கிறிஸ்து பூமிக்கு வரும் நிகழ்ச்சி

(சகரியா :14:4-5) (யூதா 1:15) 


3) இரகசிய வருகை இமைப்பொழுதில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி (1கொரி 15-51)(மத் 24-27)


இரண்டாம் வருகை பல மணி நேரம் நடக்கும் நிகழ்ச்சி (வெளி 19:11-14) 

(மத் 24:30)


4) இரகசிய வருகையில் சாத்தான் கட்டிவைக்கப்படுவதில்லை,இரண்டாம் வருகையில் சாத்தான் கட்டி வைக்கப்படுவான் (வெளி 20:2)


இரகசிய வருகையில் இயேசுகிறிஸ்து மணவாளனாக வருவார் (மத் 25:6)


இரண்டாம் வருகையில் இயேசு கிறிஸ்து  நியாயாதிபதியாக 

வருவார் (வெளி 19:11-16 ) 


5) இரகசிய வருகை இரகசியமாக இருக்கும் (1கொரி 15:51) 


இரண்டாம் வருகையை பகிரங்கமாக இருக்கும் (வெளி 1:7) 


சுரேஷ்: போதும் நண்பா! இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கும் பகிரங்க வருகையைக்கும் உள்ள வித்தியாசம் எனக்கு ஓரளவுக்கு புரிஞ்சிடுச்சு... 


ரமேஷ்: இன்னும் நிறைய வேதவசனங்கள் இருக்கு சுரேஷ் 

நான் உனக்கு பிறகு விரிவாக விளக்குகிறேன் 


நன்றி மீண்டும் சந்திப்போம்....



Monday 12 April 2021

கிறிஸ்தவ வாழ்வின் பிரதானமான நம்பிக்கைகள்:

கிறிஸ்தவ வாழ்வின் பிரதானமான நம்பிக்கைகள்:

இம்மைக்காகமாத்திரம் 
நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
(1 கொரிந்தியர் 15:19)

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
இம்மைக்குரிய காரியங்களுக்காக மாத்திரம்,அதாவது இந்த பூமிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக மட்டும் 
நாம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொண்டவர்களாய் இருந்தால்,
நாம் பரிதபிக்கப்படவர்களாய் இருப்போம்.என்று அப்:பவுல் சொல்கின்றார்,நம்முடைய தேவன் இம்மைக்கும் மறுமைக்கும் தேவனாக இருக்கிறார்,அவர் இம்மைக்கு இவ்வுலக வாழ்க்கைக்குரிய ஆசீர்வாதங்களை தாராளமாய் தருகிறவர் தான்,
ஆனால் நாம் இம்மைகுரிய ஆசீர்வாதங்களுக்காக மாத்திரம் 
இயேசுவின் மீது 
நம்பிக்கை கொண்டவர்களாய்,
நாம் இருக்கக்கூடாது,இம்மைக்குரிய கவலைகள்,இம்மைக்குரிய ஆசீர்வாதங்களின் மீது கொண்ட 
பற்று,இவைகள் நமக்கு தகுதியானவைகள் அல்ல,
ஏனென்றால் இந்த இம்மைக்குரிய வாழ்க்கை நிரந்தரமானது அல்ல, தேவனோடு நாம் மறுமையில் நித்திய நித்தியமாக நாம் வாழப் போகின்ற வாழ்க்கை தான் நிரந்தரமானது,
எனவே நம்முடைய பிரதானமான நம்பிக்கை இனிவரும் உலகத்தில் பலனை குறித்தும்,பரலோக 
வாழ்வை குறித்தும் அதிகமாய் 
இருக்க வேண்டும்.

1) கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்,நம்மையும்
அவர் உயிர்த்தெழச்செய்வார்.
(அல்லது) உயிரோடு நம்மை
எடுத்துக் கொள்வார்.

ஆம் பிரியமானவர்களே!
1 கொரி15:14 ல் அப்.பவுல் சொல்கின்றார் கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், 
எங்கள் பிரசங்கமும் விருதா, 
உங்கள் விசுவாசமும் விருதா 
என்று, கிறிஸ்தவ வாழ்வின் அஸ்திபாரமான விசுவாசம்,
கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்,அதேபோல் என்னையும் அவர் உயிர்த்தெழச் செய்வார் என்பதே, உலக மக்களுக்கு இப்படிப்பட்ட விசுவாசம் இல்லை 
ஆனால் நமக்கு இப்படிப்பட்ட 
விசுவாசம் இருக்கின்றது,
ஆதாரமும் இருக்கின்றது.

தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பிய தேவன், இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுடைய குமாரர்கள், குமாரிகளாய் இருக்கின்ற நம்மையும் எழுப்புவார் (1 கொரி6:14)
 (2 கொரி 4:14)

யோவான் 11:25-26 ல் இயேசு சொல்கின்றார்,நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்,என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;உயிரோடிருந்து 
என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான் என்று... 

இதைத்தான் அப்:பவுல் 
சொல்கின்றார் 1 தெசலோ 5:16-17 ல்.. இயேசு இரகசிய வருகையில் வரும்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்,பிறகு மரியாமல் உயிரோடு இருக்கிற நாமும் அவர்களோடு ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம்.

*************************************
"கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.
ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்"
(1 கொரிந்தியர் 15:20-22)
*************************************

2) நமக்கு மறுரூபமாக்கப்பட்ட புதிய சரீரத்தை அவர் தருவார்.

ஆம் பிரியமானவர்களே கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் புதைக்கப்படவில்லை,விதைக்கப்பட்டு இருக்கிறார்,இயேசு வரும் பொழுது 
அழிவுள்ளதாய் விதைக்கப்பட்ட அவர்களுடைய சரீரம், அழிவில்லாததாய் எழுந்திருக்கும் கனவீனமுள்ளதாய் விதைக்கப்பட்ட 
அவர்களின் சரீரம்,மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்,பலவீனமுள்ளதாய் விதைக்கப்பட்ட அவர்களின் சரீரம் பலமுள்ளதாய் எழுந்திருக்கும் ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்
(1கொரி 15:42-44)

அது மட்டுமல்ல இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையின் போது மரியாமல் இருக்கிற நாமும்  ஒரு நிமிஷத்திலே,ஒரு இமைப்பொழுதிலே, மறுரூபமாக்கப்படுவோம்.(1 கொரி 15:51) மறுரூபமாக்கப்பட்ட
மகிமையான சரீரம் நமக்கு கொடுக்கப்படும், அந்த மகிமையான சரீரம் எப்படிப்பட்டது என்றால் பிலிப்பியர் 3:21 சொல்கிறது
"நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்"அதாவது அவருக்கு எப்படிப்பட்ட மகிமையான சரீரம் இருக்கின்றதோ, அதேபோல மகிமையான சரீரத்தை
அவர் நமக்குக் கொடுப்பார்.

*************************************
"அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்" (ரோமர் 8:23)
*************************************

3) நாம் மகிமையின் சரீரத்தோடு வாழ்வதற்காக,புதியதோர் உலகத்தை உண்டாகி தருவார்,அவர் இருக்கிற இடத்திலேயே நம்மையும்,அவரோடு கூட இருக்கும்படி செய்வார்.

யோவான் 14:1-3 தேவனிடத்திலும் இயேசுவினிடத்திலும் விசுவாசமாய் இருக்கின்ற நமக்காய்,அவர் நம்முடைய பிதாவின் வீட்டிலே ஸ்தலங்களை ஏற்பாடு செய்வார் அங்கே நாம் அவரோடு கூட நித்திய நித்தியமாய் வாழ்வோம்.
(வெளி :21:2- 4) நம்மிடத்திலே அவர் வாசமாயிருப்பார்,நாம் அவருடைய ஜனங்களாய் இருப்போம்.தேவன்தாமே நம்மோடு கூட இருந்து நம்முடைய தேவனாயிருப்பார்.நம்முடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார், அந்தப் புதிய உலகத்திலே மரணமுமில்லை,

துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை. இப்படிப்பட்ட மகிமையான இடத்தை நமக்காக 
அவர் ஏற்பாடு செய்வார்.

*************************************

"நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்"
(பிலிப்பியர் 3:20)

*************************************

4) கிறிஸ்துவோடு கூட நாமும் அரசாட்சி செய்வோம்.

இயேசு கிறிஸ்துவினால் கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய 
ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்களாகிய,
நாம் அவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே என்று வேதம் சொல்கின்றது,அது மட்டுமல்ல
(ரோமர் 5:17) சொல்கின்றது, 
இயேசு கிறிஸ்துவோடு கூட 
பாடுகளை சகித்தோமானால் 
நாம் அவரோடு கூட ஆளுகை செய்வோம்.. (2 தீமோ 2:12)

ஆம் பிரியமானவர்களே!
கர்த்தர் நம்மை வருங்காலத்தில் வைக்க போகின்ற அந்த மகிமையான நகரத்திலே மரணம், துக்கம்,
வருத்தம்,வியாதி,சாபம் எதுவும் இருக்கப்போவதில்லை.
தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அங்கிருக்கும்
அவருடைய ஊழியக்காரர்களாகிய நாம்,அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்போம்,அவருடைய நாமம் நம்முடைய நெற்றிகளில் இருக்கும்,அந்த இடத்திலே இருக்கிற நமக்கு, இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் நமக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே நம்மேல் பிரகாசிப்பார்.
நாம் சதாகாலங்களிலும் அரசாள்வோம்.(வெளி 22:1-5)

*************************************
பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.
(லூக்கா 12:32)

*************************************

Pas.Marvel Jerome
Calvary Living Way Ministries

வருங்காலங்களில் நடக்கப் போகின்ற காரியங்கள் குறித்து பரிசுத்த வேதாகமம் போதிக்கும் சரியான கால வரிசைகள் : 

1) இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையும் சபை எடுத்துக் கொள்ளப்படுதலும் - (1 கொரி 15:51-52) (1தெச 4 : 16-18 ) 

2) அந்திக் கிறிஸ்து தோன்றுதல் 
( 2 தெச 2:1,7,8 ) 

3) கிறிஸ்துவின் நியாயாசனம் 
( 1 கொரி 3 : 13-15 ; 2 கொரி 5 : 4,10 ;
1 பேது 5 : 4 ) 

4) மகா பெரிய உபத்திரவம் ( தானி 12 : 1 ; மத் 24 : 4-26 ) 

5) கிறிஸ்துவின் பகிரங்க வருகை ( தானி 7 :9-14 ; மத் 24 : 27-30 ;வெளி 19 : 11-16 ) 

6) மண்ணுலகில் அவரது ஆயிரமாண்டு அரசாட்சி 
( ஏசா 11 : 4-10 ; வெளி 20 : 4-10 ) 

7) பெரிய வெள்ளைச் சிங்காசன நியாயத்தீர்ப்பு ( வெளி 20 : 11-14 ) 

 8) பூவுலகு தீக்கிரையாக்கப்படல்
 ( 2 பேது 3 : 5-13 ; வெளி 20:11 ; 21 : 1 ) 

9) புதிய வானம்,புதிய பூமி தோன்றுதல் ( ஏசா 60 : 19-22 ; 65:17 ; 66:22 ;வெளி 21 : 1-22 : 5 ) 

 *************************************