Friday 27 July 2018


+++++++++++++++++++++++++++
சத்துருவின் சகல வல்லமைகளையும்,
நீங்கள் மேற்கொள்வீர்கள்,அவனால் உங்களை மேற்கொள்ள முடியாது,
அவனுக்கு,உங்களால் சேதம் உண்டாகும்,
ஆனால்,உங்களை எதுவும் சேதப்படுத்த முடியாது.ஏனென்றால் நீங்கள் அல்ல,
கிறிஸ்துவே உங்களுக்குள் வாழ்கின்றார்.
++++++++++++++++++++++++++++

பீட்டர்: பிள்ளைகளாகிய நாம்,மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, கர்த்தராகிய இயேசுவும் நம்மைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராக இந்த பூமிக்கு வந்து மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனையும் அவனின் கிரியைகளையும்,தமது கல்வாரி சிலுவை,மரணத்தினாலே அழித்து செயலற்று போக செய்து,பிசாசானவனை
இல்பொருள் ஆக்கி அவனின்
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு,வெளியரங்கமான கோலமாக்கி,அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
(எபி:2:14) (கொலோ2:15)

ஜான்: அவர் பெற்ற வெற்றி நாம் பெற்ற வெற்றியாகும்... இயேசுவின் நாமத்தை
நாம் பிரயோகிக்கும் போது பிசாசின் வல்லமைகள் நமக்கு கிழ்படிகிறது,அவர் நமக்கு சாத்தானின் சகல வல்லமையின் மீதும் அதிகாரம் கொடுத்து இருக்கிறார்...
அந்த இருளில் வல்லமைகள் நம்மை
சேதப்படுத்தமாட்டாது (லூக்கா 10:17,19)

ஜோசப்: ஏன் நம்மை சாத்தானின் வல்லமைகள் சேதப்படுத்த முடியாது?

பீட்டர்: ஏனென்றால்,இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக இரட்சகராக  ஏற்றுக்கொண்ட நமக்குள் அவரே வாசமாயிருக்கிறார் அதனால்,எந்த சத்துருவின் வல்லமைகளும் நம்மை சேதப்படுத்த முடியாது.. இந்த சத்தியத்தை ஒரு விசுவாசி நம்பும்போது அது அவனுக்கு பலிக்கிறது...."கர்த்தரோடு இசைந்து இருக்கிறவன்,அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்"(1 கொரி 6:17)

ஜான்: அதோடுகூட நாம் இயேசுவினுடைய  சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.(எபே 5:30)

ஜோசப்: மொத்ததில் நாம் கிறிஸ்துவிலும்,கிறிஸ்து நம்மிலும் இருக்கிறார்.. இனி நாம் அல்ல, கிறிஸ்துவே நமக்குள் பிழைத்திருக்கிறார் (கலா 2:20)
எனவே தான்,இயேசுவின் நாமத்தை
நாம் பிரயோகிக்கும் போது பிசாசின் வல்லமைகள் நமக்கு கிழ்படிகிறது,
சாத்தானின் சகல வல்லமைகளை நம்மால் மேற்கொள்ள முடிகிறது, பிசாசின் வல்லமைகள் நம்மை
சேதப்படுத்த முடியவில்லை...
ஏனென்றால் வாழ்வது நமக்குள்,நாம்
அல்ல,இயேசுவே, நமக்குள் வாழ்கின்றார்
நான் சொல்வது சரியா?

பீட்டர்: 100%  சரி ஜோசப்... நாம் கிறிஸ்துவோடும்,அவர் நம்மோடும் இசைந்து இருப்பதனால்,அவரின் அன்பை விட்டு நம்மை எந்த சக்தியாலும் பிரிக்கவே முடியாது... இயேசு கிறிஸ்து நம்மில் அன்புகூருகிறதுனாலே நாம் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய், இருக்கிறோம்(ரோமர் 8:36-37)

ஆமென்... அல்லேலூயா...

நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.(ரோமர் 5:10)

 Bro:Marvel Jerome
Madudai - south India

Thursday 26 July 2018

இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.
கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்;பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.

பரத்: நமக்கெதிராய் திரளாய் எழுந்து நிற்கும் பிரச்சனைகளையும்,
போரட்டங்களையும்,பொல்லாத
மனிதர்களின் சூழ்ச்சிகளையும் கண்டு
நாம் பயப்படவோ கலங்கவோ கூடாது,ஏனென்றால் நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய சொந்த ஜனமாய் இருக்கிறோம்,தேவன் நம் சார்பில் இருக்கிறார்... எனவே நமது எண்ணக்குவியலை,நமக்கு எதிராய் திரளாய் இருக்கும் பிரச்சனைகள் மீது அல்ல... பிரச்சனைகளுக்கு தீர்வாய் இருக்கிற தேவன் மேல்  செலுத்த
வேண்டும்..

பிரவீன்: அப்படியா ?

பரத்: ஆமா நண்பா! பார்வோன்
இஸ்ரவேல் மக்களை மீண்டும் அடிமைகளாக்கிகொள்ள,திரளான ரதங்களோடும்,படைகளோடும்
அவர்களை பின் தொடர்ந்தான்...

பிரவீன்: ம்ம்ம்...

பரத்: இஸ்ரவேல் மக்கள் இதனால் கலங்கினார்கள்,ஆனால் மேசே
சொன்னார் இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்,இந்த மாகா பெரிய படையோடு யுத்தம் செய்யப்போவது நீங்கள் அல்ல,கர்த்தரே உங்களுக்காக யுத்தம் செய்வார்,நீங்கள் சும்மா இருப்பீர்கள் என்று..(யாத்14:14)அந்த வார்த்தைகளை அவர்கள் சும்மா இருந்தார்கள்,கர்த்தர் அவர்கள் சார்பாக யுத்தம் செய்து பார்வோன் சேனைகளை முறியடித்தார்...

பிரவீன்: ஆமா.....

பரத்: யூதாவுக்கு விரோதமாய்
அம்மோன் புத்திரர்,மோவாபியர்,
சேயீர் மலைத்தேசத்தார்,ஆகியவர்கள் ஏராளமான கூட்டமாக வந்தார்கள்,
யோசபாத்தும்,தேவ ஐனங்களும் யுத்தம் செய்ய பயந்தார்கள்,கர்த்தர் அவர்களை பார்த்து சொன்னார்,இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தராகிய நான் உங்களோடே இருக்கிறேன் என்று (2 நாளாகமம் 20:17)
எனவே அவர்கள் கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்று பாடும் பாடகரை முன் நிறுத்தினான்.. கர்த்தர் எதிரிப்படைகளை அவர்கள் சார்பாக முறியடித்தார்..

பிரவீன்: திரளான எதிரிகளும்,ஏராளமான எதிர்ப்புகளும் நம்மை சூழ்ந்து இருந்தாலும்,
கர்த்தர் நம்மோடு இருப்பாரானால் நமக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் அப்படிதானே?

பரத்: ஆமா நண்பா..கர்த்தர்
நம்மோடு இருக்கிறார்...(மத்1:23)
(நீதி 3:6-7) நாம் நம் வழிகளிலெல்லாம்
அவரை நினைத்துக்கொள்ள வேண்டும்,அப்பொழுது அவர் நம் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
அவரே நம் சார்பாக வந்து நிற்பார்,
நாம் கர்த்தருக்கு மட்டும்தான் பயப்பட வேண்டும்....

பிரவீன்: அப்படினா! நாம் கர்த்தரை தவிர வேறு எதற்கும் பயப்பட கூடாதா?

பரத்: ஆமா பிரவீன்.. சத்துருவுக்கும்,
நம்மை எதிர்ப்பவர்களுக்கும்,
எதிர்ப்புகளுக்கு,எதற்கும்
பயப்பட கூடாது அவைகள் எவ்வளவு பெரிய படையாக இருந்தாலும்,நாம் பயப்பட கூடாது....(உபாகமம் 20:1)
ஏனென்றால் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்,
அவர் நம் சார்பில் செயலாற்றுவார்.
இன்றைக்கு நாம் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டோம்
கர்த்தர் நமக்கு செய்யும் இரட்சிப்பைப் நமது கண்கள் பார்க்கும்,நாம் பயப்படாமலும் கலங்காமலும் இருப்போம்  ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
(1 யோவான் 4:4)

ஆமென்... அல்லேலூயா...

Bro:Marvel Jerome
Madurai-south India
Mobile Phone: 8667501353


Wednesday 25 July 2018

நீங்கள் தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள்

பரத்: இரட்சிக்கப்பட்ட நாம் தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள்,என்கிற உணர்வு நமக்குள்ளே இருக்க வேண்டும்..

பிரவீன்: தேவன் எதற்கு நம்மை முன் குறித்து இருக்கிறார்?

பரத்: (ரோமர் 8:29) நம்மை தமது குமாரனாகிய கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்.
(எபேசியர் 1:6)தேவன் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.

பிரவீன்: அப்படியா! தேவன் நம்மை  முன்குறித நிகழ்வு ஏதோ தற்செயலாக நடந்த செயல் மாதிரி தெரியலையே!!!

பரத்: ஆமா நண்பா! தேவன் நம்மை முன்குறித நிகழ்வு ஏதோ தற்செயலாக நடந்த செயல் அல்ல..(எரேமியா 1:5) நாம் நம் தாயின் கருவில் உருவாகும் முன்னே நடந்த செயல்... நம் அங்கங்களின் அவயவங்கள் உருவாகும் முன்னே உண்டான செயல், (சங்கீதம் 139:16)

பிரவின்: தேவனின் முன்குறித்தல்,அவரின் தெரிந்தெடுத்தல் எதன் அடிப்படையில் இருக்கும்... நமது அறிவின் அடிப்படையிலா? ஞானத்தின் அடிப்படையிலா? எதன் அடிப்படையில் இருக்கும்?

பரத்: தேவன் நமது தகுதியின் அடிப்படையில்,நம்மை முன்குறிக்கிறவர் அல்ல,அவர் தமது கிருபையின் அடிப்படையில் நம்மை முன்குறிக்கிறார்,
அதனால்தான் தேவன் ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளாகிய நம்மை தெரிந்துகொண்டார்,பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமான நம்மை தெரிந்துகொண்டார்.
உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானஅற்பமாய் எண்ணப்பட்டவர்களாகிய நம்மை
தெரிந்துகொண்டார் (1 கொரி 1:27-28)
அத்தனையும் அவரின் கிருபையின் அடிப்படையில் மட்டுமே... நமது தகுதியின் அடிப்படையில் இல்லை...

பிரவீன்: உண்மையிலே ஆச்சரியமாக இருக்கிறது நண்பா! தேவனுடைய அளவற்ற அன்பை எண்ணிப்பார்க்கும் போது அது நமது அறிவுக்கு எட்டாததாக இருக்கிறது..
கிறிஸ்து இயேசுவின் மூலமாக தேவன் நம்மீது காட்டிய அந்த கிருபைக்காக,
நாம் என்றும் நன்றியுள்ள உள்ளம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்..

ஆமென்... அல்லேலூயா...

அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ண வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

(எபேசியர் 3:19)

Tuesday 24 July 2018

பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து,எருசலேமிலும், யூதேயா முழுவதிலும்,சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும்,எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
(அப்போஸ்தலர் 1:8)

ஜான்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்
கல்வாரி சிலுவைக்கு பிறகு,மனுகுலத்திற்கு வந்த முதல் ஆசீர்வாதம் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம்

பீட்டர்: ஆமா நண்பா! பரிசுத்த ஆவியானவர் ஒரு விசுவாசியின்
வாழ்வில் வரும் போது,முதலில்
அவர்,அவர்களின் பெலவீனமான
காரியங்களை நீக்கி அவர்களை பெலப்படுத்துகிறார்,அதனால்
அவர்கள் இயேசுவுக்கு  சாட்சிகளாயிருப்பார்கள்..

ஜான்:ஆம் நாம் பெலவீனமான இருந்துகொண்டு,இயேசுவுக்கு
சாட்சியாக இருக்க முடியாது,
எனவேதான்,ஆவியானவர் வந்த
உடனே,பெலப்படுத்தும் வேலையை
நம்மில் ஆரம்பிக்கிறார்..இயேசுவின் கல்வாரி நிகழ்வுக்குப்பிறகு பெலவீனமாய் பூட்டிய வீட்டிற்குள்,பயத்தோடு இருந்த சீஷர்கள்,பரிசுத்த ஆவியானவரின் பொழிவுக்குப்பிறகு பெலனடைந்து தைரியாமாய்,சுவிசேஷத்தை பிரசங்கிக்க தொடங்கி,சாட்சியாக வாழ்ந்தார்கள்,

பீட்டர்:ஆமா ஜான்! ஆவியானவரின் செயல்பாடு ஒரு மனிதனின் வாழ்வில் வெளிப்படும் போது,அவனின் வாழ்கையில் இருக்கும் பெலவீனமான காரியங்கள்,
நீங்குகிறது,அவன் புது பெலன் அடைகிறான்,பிறகுதான்,அவனில்
இயேசுவுக்கு சாட்சி என்கிற நிலை
ஆரம்பமாகிறது..

ஜான்: நாம் பரிசுத்தில்,பெலவீனமாக இருந்து சாட்சியாக இருக்க முடியாது,
நாம் ஆரோக்கியத்தில்,பெலவீனமாக இருந்து சாட்சியாக இருக்க முடியாது,
நாம் ஐஸ்வரியத்திலே,பெலவீனமாக இருந்து சாட்சியாக இருக்க முடியாது,
நாம் எதிலும் பெலவீனமாக இல்லாமல் எல்லாவற்றிலும் பெலமுள்ளவர்களாய் இருப்போம்,என்றால் நாம் தான் இயேசுவுக்கு சாட்சி...

பீட்டர்: ஆமா! ஒரு விசுவாசி
சினிமா போஸ்டரை கண்டவுடன்,
கண்களை மூடிக்கொண்டு,பாவத்தில் விழுந்துவிடுவோமோ என்று பயப்படுகிறார் என்றால் அவர் பரிசுத்ததில் பெலவீனமாய் இருக்கிறார் என்று அர்த்தம்....

ஒரு விசுவாசி கொஞ்சம் மழையில்
நனைந்த உடன் தனக்கு காய்ச்சல் வந்துவிடுமோ!ஜலதோஷம் பிடித்துவிடுமோ! என்று பயந்து மருந்தும் கையுமாக அலைகிறார் என்றால் அவர் ஆரோக்கியத்தில் பெலவீனமாக இருக்கிறார் என்று அர்த்தம்....

ஒரு விசுவாசிக்கு பணம் வந்தவுடனே முதலில்,கர்த்தருடைய காரியங்களுக்கென்று விதைப்பதற்கும்,கஷ்டப்படுகிற மனிதர்களுக்கு கொடுப்பதற்கும்
அவர் தயங்குகிறார் என்றால்  ஐஸ்வரியத்திலே பெலவீனமானவராக இருக்கிறார் என்று அர்த்தம்...

ஒரு ஊழியரிடம் திடீரென இந்த
கூட்டத்தில் அரைமணி நேரம்,
நீங்கள் செய்திகொடுங்கள் ஒன்று
சொன்ன உடன்.. நான் செய்தி எதுவும்
தயார் செய்யவில்லை என்று சொல்லி
தயங்கி தடுமாறுகிறார் என்றால்,அவர் ஆவியானவரின் அபிஷேகத்தை பெறாமல் பெலவீனமாய் இருக்கிறார் என்று அர்த்தம்...

இன்னும் இதுபோல் பல பெலவீனமான காரியங்கள் உள்ளன.......

இப்படிப்பட்ட பெலவீனமான காரியங்களிலிருந்து நம்மை விடுதலையாக்கி,பெலப்படுத்தி
இந்த பூமியின் கடைசிப்பரியந்தமும் இயேசுவுக்கு சாட்சியாக நம்மை மாற்றக்கூடியவர் தான் பரிசுத்த ஆவியானர்

ஜான்: முதல் நூற்றாண்டு சபைகளில்
இருந்த எழுப்புதல்,வல்லமையான செயல்பாடு இன்றைய காலக்கட்டத்தில் குறைந்ததற்கான,காரணம் சபைகள் ஆவியானவரின் அபிஷேகத்திற்கும்,
அவரின் ஆளுகைக்கும் முக்கியத்துவம் கொடுக்காததே ஆகும்.. நாம் சாட்சியாக வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம்,நம்மை சாட்சியாக ஆக்குகிறவருக்கு அதிக இடம் கொடுக்க வேண்டும்...

பீட்டர்: ஆமா நண்பா! ஆதிகால திருச்சபையில் சீஷர்கள் ஆவியானரின் அபிஷேகத்தில் நிறைந்து பிரசங்கம் பண்ணினார்கள்,அதனால் முதல், பிரசங்கத்திலே மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள்,ஆனால் இன்று ஊழியர்களிடம் பிரகங்கம் இருக்கிறது,
அபிஷேகம் இல்லை அதனால் ஆத்தும அறுவடை மிகக்குறைவாக இருக்கிறது..
அபிஷேகம் இல்லாத பிரசங்கள்,
நெருப்பில்லாமல் செய்யப்படுகிற
சமையல்.. அதனால் யாருக்கும் பயன் இல்லை..

ஜான்: ஆமா நண்பா!அழகான அலங்காரம் நிறைந்த அரைமணி நேர செய்தியை விட,
அபிஷேகம் நிறைந்த ஐந்து நிமிட செய்தி,
அதிக ஆத்துமாக்களை அறுவடை செய்யும்...

பீட்டர்: அதுமட்டுமல்ல,ஆவியானவரின் அபிஷேகம் ஒரு ஊழிக்காரனின் மீது இருந்தால் மட்டும் போதும்,அவனை
அந்த அபிஷேகம்  தலைசிறந்த ஊழியனாக மாற்றிவிடும்,தாவீதின் மீது இருந்த அபிஷேகம் அவனை எப்படி ராஜாவாக மாற்றியதோ அதேபோல்....

ஜான்: ஆமா,நமது வேலை அனுதினமும்    மக்களை சபையிலே  கொண்டுவந்து சேர்ப்பது அல்ல,நமது வேலை அனுதினமும் அபிஷேகத்தில் நிறைந்து
மக்களுக்கு சத்திய வசனத்தை  போதிப்பது,

இரட்சிக்கப்படுகிறவர்களை அநுதினமும் சபையிலே கொண்டு வந்து  சேர்க்கிற வேலையை கர்த்தர் பார்த்துக்கொள்வார்..
(அப் 2:47).... 

பீட்டர்: ஆமா! ஆனா இன்று இந்த காரியங்கள் எல்லாம் சபைகளிலே தலைகீழாக பின்பற்றப்படுகிறது,
அதனால்தான் சபைகளில் ஆத்துமாக்களின் நிறைவு இல்லாமல்,குறைவாக இருக்கிறது...

ஜான்: கர்த்தரால் அழைக்கப்பட்ட,
அபிஷேகம் பெற்ற ஒரு ஊழியக்காரன்,படிப்பறிவு இல்லாதவராகவோ,வேதாகம கல்லூரியில் பாடம் பயிலாதவராகவோ,இருக்கலாம்,
இல்லை வயதில்,அனுபவத்தில் சிறியவராகவோ இருக்கலாம்,ஆனால்  அவர் மேல் இருக்கிற அபிஷேகம் அவரை பிரகாசிக்க செய்யும்,அவர் செய்வதெல்லாம் வாய்க்கும்,அனேக அற்புத அதிசயங்களை கர்த்தர் அந்த அபிஷேகம் பெற்ற ஊழியக்காரன் மூலமாக நடப்பிப்பார்..
அந்த அபிஷேகம் பெற்ற ஊழியக்காரர்களுக்கு யாரும் போதிக்க வேண்டியது இல்லை,அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து அவர்களுக்கு  போதிக்கும் (1 யோவான் 2:27)

ஆமென்... அல்லேலூயா...

Bro. Marvel Jerome
Madurai
கர்த்தர் வியாதியை உன்னிலிருந்து விலக்குவார்......

உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.
(யாத்திராகமம் 23:25)

பீட்டர் : என்ன சாம்.. ஒருவாரமா
ஆளேயே காணோம்... வெளியூருக்கு போயிருந்தியா ?

சாமுவேல்: இல்ல பீட்டர்,ஒரு வாரமா எனக்கு டெங்கு காய்ச்சல்,ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி இருந்தேன்..

பீட்டர் : ஓ!!! அப்படியா? இப்ப எப்படி இருக்க சாம்..

சாமுவேல்: ஏதோ இருக்கேன் நண்பா!
நான் ஏதோ காரியத்துல தவறி பாவம் செய்துட்டேன் போல,அதான் கர்த்தர் எனக்கு வியாதியை கொடுத்து என்னை ஒழுங்கு படுத்திகிட்டு இருக்கிறார்...

பீட்டர் : கர்த்தர் உனக்கு வியாதியை கொடுத்தாரா? நீ சொல்றது தவறு சாமுவேல்,கர்த்தர் நமக்கு வியாதியை கொடுக்கிறவர் அல்ல, வியாதியை நம்மிலிருந்து விலக்குகிறவர்,(யாத்:23:25)
அதுமட்டுமல்ல  எந்த வியாதியும்
நம்மை அணுகாதவாறு நம்மையும் விலக்கி காக்கிறவர்.. கர்த்தர் இதை முதலில் தெரிந்து கொள்..

சாமுவேல்: அப்படியா?

பீட்டர் : ஆமா,வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன் என்று கர்த்தர் சொல்கிறார்
அப்படினா வியாதியை உன்னில் சேர்த்தது யார்?

சாமுவேல்: அதுதான்ப்பா தெரியல!!!

பீட்டர் : ஏன்டா உனக்கு விடை தெரியலனா நீ கர்த்தர் மேல பழியை போடுவியா?

சாமுவேல்: ம்ம்ம்... இல்லப்பா

பீட்டர் : சாம்... லூக்கா 13 ஆம் அதிகாரத்தில் ஒரு சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது...

பதினெட்டு வருடமாய் பெலவீனமாய் கூனியாய் இருந்த ஒரு பெண்ணை இயேசு ஓய்வு நாளிலே குணமாக்குகிறார்.. மக்கள் கூட்டத்தால் கோபம் கொண்ட ஜெப ஆலய தலைவன் ஓய்வுநாளில் குணமாக்கி கொள்ளக்கூடாது என்று மக்களை திட்டுகிறான்... அதற்கு இயேசு இவ்வாறு பதில் அளித்தார்.....

"இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார் "(லூக்கா 13:16)

நண்பா! வியாதி என்பது சாத்தானின் கட்டு... இதை நீ நன்றாக புரிந்து கொள்,
#கட்டியது சாத்தான்,#கட்டவிழ்த்தது கர்த்தர்.

சாமுவேல்: அப்படியா! ஆனா எங்க
சபை போதகர்.. வியாதி என்பது நம்மை ஒழுங்குபடுத்தும் பிரம்பு என்று சொல்கிறார் பிரம்பை கையாடாதவன்
தன் மகனை பகைக்கிறான்.. எனவே
தேவன் அப்பைக்கு அப்ப வந்து வியாதி என்னும் பிரம்பால் நம்மை அடித்து ஒழுங்குபடுத்துவார் என்று
எங்க சபை போதகர் போதிக்கிறார்...

பீட்டர் : அது தவறான போதனை
சாம்... பிரம்பு வியாதி என்றால்,அந்த பிரம்பு நம்மை ஒழுங்கு படுத்தும் என்றால்
ஏன் தேவன் அதை விலக்க வேண்டும் (யாத்:23:25)

சாமுவேல்: ஆமாப்பா அதான் எனக்கு தெரியல...

பீட்டர் : பிரம்பு என்பது வியாதி அல்ல,
பிரம்பு என்பது நம்மை கண்டித்து ஒழுங்குபடுத்தும் தேவனுடைய வார்த்தை

சாமுவேல்: ஓ... அப்படியா!!

பீட்டர் : ஆமா சாம்... நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ?
(1 கொரி 4:21) என்று பவுல் கேட்பது வியாதியோடு வரவா? என்று அர்த்தமாகாது பிரம்பு என்பது கண்டித்து உணர்த்தி ஒழுங்குபடுத்தும் தேவனுடைய வார்த்தையாகும்....தேவன் தன் பிள்ளைகளை தம் வார்த்தையால்தான் நடத்துவார்..

சாமுவேல்: ஆமா இப்பதான் எனக்கு புரியுது...

பீட்டர் : அவரின் கிருபை நிறைந்த வார்த்தையை கேட்டதால் நீ இரட்சிக்கப்பட்டாய்,பிசாசின் ராஜ்யத்திலிருந்து விடுதலை பெற்று பரலோக ராஜ்யத்தின் பிரதிநிதி ஆனாய்
அவரின் கிருபை நிறைந்த வார்த்தையால் இரட்சிக்கப்பட்ட உன்னை அந்த வார்தையாலே நடத்துவார்,கண்டித்து உணர்த்துவர்,இதை நன்றாக தெரிந்து கொள் சாம்....

சாமுவேல் : ஓகே நண்பா!

பீட்டர் :

#வியாதி என்பது உன்னை ஒழுங்குபடுத்தும் ஆசீர்வாதம் என்றால் அதை ஏன் கர்த்தர் விலக்க வேண்டும் (யாத்:23:25)

#இயேசு தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்
(மத்8:17) வியாதியும் பெலவீனமும்
உன்னை சீர்படுத்தும் நெறிப்படுத்தும் ஆசீர்வாதம் என்றால் இயேசு ஏன் அதை தன்மீது போட்டுக்கொண்டு சுமக்க வேண்டும்

#வியாதி என்பது பிசாசின்
வல்லமை,அதில் அகப்பட்டவர்களை குணமாக்குவதே கர்த்தரின் வல்லமை (அப்10:38) நீ வியாதியின் இருப்பது தேவனின் விருப்பம் இல்லை,நீ பூரண சுகத்துடன் இருப்பதே தேவனின் விருப்பம்.

#நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும்  பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது (யாக்1:17) வியாதி என்பது நன்மை அல்ல,அது தீமை...
வியாதி என்பது வரம் அல்ல,அது சாபம்..

சாமுவேல்: இப்பதான்ப்பா எனக்கு எல்லாம் நல்ல புரியுது.. நான் ஆரோக்கியமாக இருப்பதே தேவனுடைய விருப்பம் எனக்கு வந்த வியாதிக்கு காரணம் தேவன் அல்ல பிசாசு... இயேசுவின் நாமத்தினால் வியாதி என்னும் பிசாசின் வல்லமையை என் சரீரத்திலிருந்து விரட்டுகிறேன், ஆமென்... அல்லேலூயா... இனி தேவ கிருபையால் என்றுமே ஆரோக்கியமாக வாழ்வேன்...

ஆமென்... அல்லேலூயா...

Thursday 12 July 2018



என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.

(சங்கீதம் 41:11)

பரத்: நாம் ஒவ்வொரு நாளும் பலவித போராட்டங்கள மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில இருக்கிறோம். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் போராட்டங்கள் நடந்தி கொண்டு தான் இருக்கு

பிரவீன்: ஆமா இது ஒவ்வொரு தேவப்பிள்ளையினுடைய வாழ்க்கையிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கு....
ஏனென்றால் நம்முடைய எதிராளியான சத்துருவானவன் எப்பொழுது நம்மை விழத்தட்டலாம் என்று வகைதேடி சுற்றிக் கொண்டேயிருக்கிறான்.

பரத்: பல தடுமாற்றங்கள் நம்ம  வாழ்க்கையில வந்தாலும் தோல்வியைச் சந்திக்கும்படியான ஒரு சூழ்நிலையை தேவன் அனுமதிப்பதே இல்லை.நம்முடைய தேவன் அன்பானவர். நம்மேல் வைத்த மிகுதியான அன்பினாலே தம்முடைய ஒரே குமாரனையே நமக்காகப் பலிகொடுத்தவர். அப்படிப்பட்டவர் நம்மைக் கைவிடுவாரா என்ன?

பிரவீன்: கண்டிப்பாக அவர் நம்மை கைவிடவே மாட்டார்.... நம்ம ஆவிக்குரிய வாழ்க்கையில நமக்கு சத்துரு கொண்டு வருகிற போராட்டங்களில் நமக்கு ஒருசில சறுக்கல்கள் வந்தாலும் இறுதியில் நம்முடைய சத்துருவிற்கு தான் தோல்வி வரும்,கிறிஸ்துவுக்குள் நமக்கு எப்போதும் வெற்றி தான்,சாத்தான் ஒருபோதும் ஜெயமெடுக்க முடியாதபடி நம்முடைய ஜெயகிறிஸ்து  நம்மேல் பிரியமாயிருக்கிறார்,

பரத்: ஆமா பிரவீன்,இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைத்தனத்தில் இருந்தபோது  அவர்களுடைய  பட்டயமும், புயபலமும் அவர்களை இரட்சிக்கவில்லை. தேவன் அவர்கள்மேல் வைத்த பிரியத்தினால் அவர்களை இரட்சித்தார் என்று வேதத்தில் போடப்பட்டுள்ளது.(சங்.44:3)

பிரவீன்: நாம் எடுக்கிற சுயமுயற்சிகளை சார்ந்து நாம் ஜெயமுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ நினைத்தால் பெரும் தோல்விதான் வரும். ஆதனால் தேவன் நம்மேல் வைத்த  அன்பையையும்,பிரியத்தையும் சார்ந்து கொள்வோம்,தேவன் கிறிஸ்துவுக்குள் நம்மேல் வைத்த பிரியமும்,அவரின் மகிமையின் பிரகாசமும்,சத்துரு நமக்கு விரோதமாக கொண்டு வருகிற சகல காரியங்களிலும் நம்மை ஜெயம் கொள்கிறவர்களாய் மாற்றும்

ஆமென்....... அல்லேலூயா.......

அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது.
(சங்கீதம் 44:3)

=======================




தேவனுடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
(ரோமர் 8: 28)

பரத்: தேவனிடத்தில் அன்புக்கூறும் நமக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கும் என்பதைக் குறித்த நிச்சயம் நமக்குள் அதிகமாக பெருக வேண்டும்

பிரவீன்: நமது வாழ்வில் நடக்கும் சோதனைக்கும்,வேதனைக்கும்,கர்த்தர் காரணர் அல்ல.. அதற்கு காரணம் சாத்தானும் அவனுக்கு செவிகொடுத்து, அவன் காட்டும் இச்சையால் இழுக்கப்பட்ட நாமும் தான்.. நம் கர்த்தர் நல்லவர்... அவர் யாரையும் பொல்லாங்கினால் சோதிப்பவர் அல்ல

பரத்: எனவே, நம்முடையடைய நிலைமைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், எல்லா வேளைகளிலும் நாம் கர்த்தரை நம்ப வேண்டும் குறிப்பாக சோதனை உபத்திர வேளைகளில் தேவன் நம்மை தப்புவிக்க வல்லவராக இருக்கிறார், தீமையான சூழ்நிலையிலிருந்து, நம்மை விடுவித்து,நன்மையான வழியில் நடத்துவார்  என்கிற விசுவாசத்தில் உறுதியடைய வேண்டும்...

பிரவீன்: ஆமா, நண்பா அதோடுகூட
நம் குறைவுகளையெல்லாம் தேவன் நிறைவாக்குவார்...நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவர்,அவர் நம்மை அனாதையாக விட்டுவிட மாட்டார்.. நமது வாழ்வில் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம்,எனவே நம் வாழ்நாட்கள் அனைத்திலும் ஒரே நல்லவராகிய நம் தேவனை துதிப்போம்.. உயர்த்துவோம்...

ஆமென்... அல்லேலூயா...

ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.

(சங்கீதம் 86:5)




#நாம் உலகத்தோடு கலந்து இருக்கிறவர்கள் அல்ல! உலகத்தைக் கலக்குகின்றவர்கள்!

டேனியல்: ஆதி திருச்சபையின் எருசலேம் பட்டணத்திலே, இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, ஏற்றுக் கொண்டவர்கள்,அவரைப் பற்றி பேசவோ,பிரசங்கிக்கவோ கூடாது என்ற நிலை காணப்பட்டாலும் கூட
ஆதி கிறிஸ்தவ விசுவாசிகள் மதத்தலைவர்களின் கட்டளைகளை மீறி எருசலேம் பட்டணத்தை இயேசுவின் நாமத்தினால் நிரப்பினார்கள்.

பால்ராஜ்: ஆமா டேனி ஆதி
கிறிஸ்தவ விசுவாசிகள் அதிக வாஞ்சையும் பக்திவைராக்கியமும் கொண்டவர்களாக இருந்தார்கள்,ஏனெனில் அவர்களின் விசுவாசம்  முழுவதும் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் மட்டுமே இயங்கியது,அவர்களுக்கு போதித்த அப்போஸ்தர்கள் திருவசனத்தை மட்டுமே போதிக்கிறவர்களாக காணப்பட்டனர்... அதனால் தான் அவர்களுக்கு வாஞ்சையும் பக்திவைராக்கியமும் அதிகமாக இருந்தது... அது அவர்களுக்குள் கொழுந்துவிட்டு எரிந்தது...

இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, தன்னுடைய வாழ்வில் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவரான அப்போஸ்தலன் பவுலும் பல இடங்களுக்கு பிரயாணங்கள் செய்து இயேசுவே கிறிஸ்து என்று தர்க்கம் செய்தவராக காணப்படுகின்றார்.
ஏனெனில் அவரது ஆவியில் அனல் இருந்தது....

இவ்வாறான சந்தர்ப்பம் ஒன்றில் பவுல் தன்னுடனே சீலாவையும் அழைத்துக் கொண்டு தெசலோனிக்கே என்ற பட்டணத்தில் உள்ள ஜெப ஆலயம் ஒன்றிற்கு சென்று அவர் தன் வழக்கத்தின் படி வேதவாக்கியங்களைக் கொண்டு அவர்களோடு தர்க்கித்து கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும்  நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.
இதனால் அந்த பட்டணத்தில் அமளியுண்டாகியது பட்டணத்தில் விசுவாசியாகிய யாசோனுடைய வீட்டை அமளி காரர்கள் வளைத்துக் கொண்டு பவுலையும், சீலாவையும் கண்டுபிடிக்க இயலாமல் யாசோனையும் சில சகோதரரையும் பட்டணத்து அதிகாரிகளிடம் இழுத்துக் கொண்டு  வந்து‘உலகத்தைக் கலக்குகின்றவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.’ என்று கூறினார்கள். (அப்17:3-6)

டேனியல்: ஆமா முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் சமுதாயத்தைத் தலைகீழாக மாற்றினார்கள் இது அவர்களை எதிர்த்தவர்களே சொன்ன சாட்சி ஆகும்.

பால்ராஜ்: இன்று உலகில் கோடிக்கணக்கான மக்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர்.இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி வசனத்தைப் பரப்புவதை ஆதரிக்கின்றனர். ஆனால் முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போல இவர்கள் உலகத்தைக் கலக்கவோ, மாற்றவோ முடியவில்லை.

டேனியல்: ஏன் என்று ஒரு கேள்வியை எழுப்பினோம் என்றால் பதில்....
இன்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லி அனேகர் இருக்கிறார்கள்,ஆனால் கிறிஸ்துவை உடையவர்களாக எல்லோரும் இல்லை.. அவர்கள் வேத வசனத்திற்கு முக்கியத்துவம்  கொடுக்கிறது இல்லை,வேத  வசனத்துக்கு ஏற்ப தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்வதும் இல்லை,

பால்ராஜ்: ஆமா! அதுமட்டுமல்ல உலகில் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களின் விசுவாசம் அவர்களின் பாரம்பரியத்தின் அடிப்படையில் இருக்கிறது
வேதத்தின் அடிப்படையில் இல்லை, அதனால்தான் அவர்களால் தங்களின் சுய வாழ்வை கூட மாற்றி அமைக்க முடியாமல் போகிறார்கள்,நமது சுய வாழ்வை மாற்ற முடியாமல் நம்மால் எப்படி நமது  சமுதாயத்தையே மாற்ற முடியும்?

டேனியல்: ஆமா நண்பா! நாமே இருளில் இருந்து கொண்டு ஒளியின் இடத்திற்கு வாருங்கள் என்று எப்படி மற்றவர்களுக்கு கூற முடியும்? நாமே கீழான இடத்தில் இருந்து கொண்டு உயரமான இடத்துக்கு வாருங்கள் என்று எப்படி மற்றவர்களுக்கு கூற முடியும்?கிறிஸ்துவை அறியாத பிற மதத்தினர்  கிறிஸ்தவர்களாகிய நம் வாழ்க்கையைப் பார்த்துத் தான் கிறிஸ்தவத்தை எடை போடுகின்றனர்

எனவே நாம் தேவனுடைய வார்த்தைகளை கேட்பதும்,போதிப்பதும் என நிருத்திவிடாமல் தேவனுடைய வார்த்தைகளைக்  கருத்தாய் கடைப்பிடித்து கிறிஸ்துவுடையவர்களாக வாழ்ந்தோமானால் நம்மால் சமுதாயத்தை மட்டுமல்ல உலகத்தையே இயேசுவுக்காக மாற்றி அமைத்திட நிச்சயம் முடியும்

"உலகத்தைக் கலக்குகின்றவர்கள் இங்கேயும் வந்து விட்டார்கள்.என்ற பெயரை நாமும் நிச்சயம் பெற்றுக் கொள்ள முடியும்"

ஆமென்... அல்லேலூயா...

======================
Revelation by spirit of God
======================




அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.(ரோமர் 10:11)

பரத்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் யாரும் நிச்சயமாக வெட்கப்படுவதில்லை.நம்முடைய வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலாவது நாம் வெட்கப்பட்டு போய்விடுவோமோ
என்று எண்ணவேண்டிய அவசியமில்லை.

பிரவீன்: ஆமா! அவரை விசுவாசிப்பவர்கள் ஒருக்காலும் வெட்கப்பட்டு போகமாட்டார்கள்.ஏசாயா 28:16 –ல் “விசுவாசிக்கிறவன் பதறான்” என்று சொல்லுகிறார்.எனவே நாம் எந்த சூழ்நிலையிலும் வெட்கப்படவும் பதறவும் அவசியமும் இல்லை.

பரத்: ஒரு சில தருணங்களில் நம்முடைய வாழ்க்கையில் நாம்  எதிர்பார்க்கிற காரியங்களைக் குறித்து, தேவனிடத்தில் ஜெபித்து அவருடைய சித்தத்திற்கும்,
அவருடைய வழிநடத்தலுக்கும் நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது,அந்த நேரத்தில் நாம் பதறவேண்டிய தேவையில்லை,அவர் எப்பொழுதும் நமக்கு சிறந்ததையே கொடுக்கிறவராக இருக்கிறார்.

பிரவீன்: ஆம் இதை நாம் எப்பொழுதும் நினைத்துக் கொள்ள வேண்டும் இன்னுமாக தேவன், ஏசாயா 49:23 –ல் “நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்” என்று சொல்லுகிறார். அவர் கர்த்தர். தேவாதி தேவன். சகலத்தையும் படைத்தவர். சர்வ ஞானம் கொண்ட அவரின் சித்தத்திற்காக,நாம் காத்திருக்கும்பொழுது ஒருக்காலும் நாம் வெட்கப்பட்டு போகமாட்டோம்.

பரத்! அதுமட்டுமல்ல!! நண்பா!!!எரேமியா தீர்க்கதரிசி,இவ்வாறு சொல்கிறார்............
“கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (எரே 17:7) என்று சொல்லுகிறார். ஆகவே ஆசீர்வதிக்கப்பட்ட பாக்கியவான்களாகிய நாம் கர்த்தர்மேல் வைத்திருக்கிற விசுவாசத்தை
ஒருக்காலும் தளர்த்தி விடக்கூடாது.

பிரவீன்: ஆமா நண்பா!! நாம்  கர்த்தர்மேல் வைத்திருக்கிற விசுவாசத்தை
மட்டும் எந்த சூழ்நிலையிலும் தளர்த்தி விடக்கூடாது. சாத்தான் எப்பொழுதும் நம்முடைய விசுவாசத்தை அசைத்து தாக்குகிறவனாகவே வருகிறான்
நாம் அசையவும்கூடாது,அவனால் தாக்கப்படவும் கூடாது... நாம் விசுவாசத்தில் மிகவும் உறுதியாக நின்று சாத்தானை துரத்தி விரட்ட வேண்டும்.....

பரத்: ஆமா நண்பா! நாம் சாத்தானால் துரத்தப்பட்டு குழம்பி சுற்றி ஓட  கூடாது,
நாம் தான் அவனை துரத்தி
ஓட விட வேண்டும்.....
பலவிதமான நெருக்கங்களையும் சோதனைகளையும் சாத்தான் கொண்டு வரும் பொழுது,நாம் பதறவேண்டிய தேவையும் இல்லை, அதிர்ச்சி அடைய வேண்டிய அவசியமில்லை, ஜீவனுள்ள  தேவனை விசுவாசிக்கிற நம்மை,அவர் வெட்கப்பட விடமாட்டார்,நிச்சயம்
கைவிடவே மாட்டார்...நாம் நம்
விசுவாசத்தில் உறுதியாயிருப்போம்,
கர்த்தர் நம் விசுவாசத்தைக் கனப்படுத்துவார்.. நம் தலையை
அவர்।உயர்த்துவார்....

ஆமென்.... அல்லேலூயா....

நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்,வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்;
என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

(யோவேல் 2:27)




சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

(ரோமர் 1:18)

டேனியல்: தேவ பிள்ளைகளை
எந்த ஒரு மனிதன்,சத்தியத்தை அறிவிக்கவிடாமல் அடக்கி வைக்கிறானோ,சத்தியத்திற்கு விரோதமாய் குடும்பத்திலிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ எழும்பி எதிர்த்து நிற்கிறானா அவன் மேல் தேவ கோபாக்கினை இறங்கி இருக்கிறது

பால்ராஜ்: ஆமா சத்திய வசனங்களை பிரசங்கிக்கவிடாமல் தடுக்கிறவர்கள் இயேசுவையே துன்படுத்துகிறார்கள்...

டேனியல்: ஆமா! நண்பா அப் 9:5 ல் பார்கிறோமே!!
ஆதி திருச்சபையிலே சவுல்
சுவிசேஷத்திற்கு விரோதமாய் இருந்தான், சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறவர்களை துன்புறுத்தினான்.. இயேசு அவனை சந்திக்கும் போது...
"நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே"என்றார்.... எனவே சத்தியத்திய  வசனங்களை பிரசங்கிக்கவிடாமல்  தடுக்கிறவர்கள்,தேவ பிள்ளைகளை  சத்தியத்தின் நிமித்தம் துன்பப்படுத்துகிறவர்கள்  இயேசுவை  நேரடியாக துன்படுத்துகிறார்கள்... அவர்கள் மீது தேவகோபம் இருக்கிறது என்று வேதம் போதிக்கிறது...

பால்ராஜ்: ஆமா! இது முற்றிலும் உண்மை... தேவன் சவுலை எச்சரித்தார்
"சவுலே சவுலே தயவு செய்து இரட்சிக்கப்படுவிடுப்பா! என் ஊழியர்களை தடை செய்யாமல் விடுப்பா,நீ ரொம்ப நல்ல யூதன் கிருபையின் காலத்துல இருக்கிறாய்
 என்று இயேசு அவனிடம் பேசவில்லை"
#முள்ளில் உதைக்கிறது #உனக்குதான் #பிரச்சனை என்று எச்சரித்தார்

டேனியல்: ஆமா நானும் கூட சொல்கிறேன் இந்த செய்தியை படித்து கொண்டு இருக்கிறவர்களே! உங்களில் யாராவது... வசனத்தை கேட்கிறதற்கு தடை செய்கிறவர்களாயும்! சத்தியத்தை  போதிக்கவிடாமல் விரோதமாய் நீங்க இருக்கிறவர்களாயும் இருப்பீர்களானால், உங்களுக்கு ஒரு வார்த்தையை மறுபடியும் சொல்கிறேன்
#முள்ளில் உதைக்கிறது #உங்களுக்குதான் #பிரச்சனை

பால்ராஜ்: ஆமா! நானும் சொல்கிறேன்
#முள்ளில் உதைக்கிறது #அவர்களுக்கு தான் #பிரச்சனை.... அவ்வாறு முள்ளில் உதைத்து தன்னை காயப்படுத்திக்கொண்டு தன் கண்களை குருடாக்கி கொண்ட அந்த சவுல்  இரட்சிக்கப்பட்டு,கண்கள் திறக்கப்பட்டு  அப்:பவுலாக ஆன பிறகு இவ்வாறு எழுதுகிறார்....

"சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது"
(ரோமர் 1:18) இந்த வசனத்தை நாம்
புதிய ஏற்பாட்டில் வாசிக்கிறோம்...
நம் தேவன் அன்பாகவே இருக்கிறார்,அவர் கிருபை மிகுந்தவர் தான்,இரக்கத்தில் ஐஸ்வரிய சம்பூரணர்தான்... ஆனால் மனுகுலத்தின் இரட்சிப்புக்குகாக தன் அளவற்ற அன்பால் செய்து முடித்த காரியங்களை.. மக்களின் மீட்புக்காக சுவிசேஷமாக அறிவிக்க தேவன் தனது பிள்ளைகளை நியமித்து இருக்கிறார்,அவ்வாறு அறிவிக்கிற தேவ பிள்ளைகளை அடக்க நினைப்பவர்களையும்,
ஒடுக்கி தடை செய்ய வருபவர்களையும்,
தேவன் சும்மா விட்டுவிட மாட்டார்..
அவர்கள் மீது தேவகோபம் வந்தே தீரும்...

டேனியல்: ஆமா நண்பா! அப்:பவுல் இவ்வாறு தீமோத்தேயுக்கு எழுதுகிறார்

"கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்;#அவனுடைய #செய்கைக்குத்தக்கதாகக் #கர்த்தர் அவனுக்குப் #பதிலளிப்பாராக.
நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன்"(2 தீமோத்தேயு 4:14-15)

பால்ராஜ்: எந்த பாவத்தையும் மன்னிக்கிற நம் அன்பின் தேவன்,சுவிசேஷத்தை சத்தியத்தை போதிப்பதற்கு தடை செய்கிற காரியங்களை தண்டிக்காமல் விட மாட்டார்... அவர்களின் செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் பதிலளிக்காமல் விடமாட்டார்....

டேனியல்: ஆமா நண்பா! சத்தியத்தை கேட்கவிடாமல்,போதிக்க விடாமல்,எழுதவிடாமல்,தடை செய்கிற ஒரு மனிதனை தேவன் தண்டிக்காமல் விட்டால்..ஆயிரம் பேர் சுவிசேஷத்தை கேட்காமல்,சத்தியத்தை அறியாமல் நரகத்திற்கு போவதற்கு அது காரணமாகிவிடும்,ஆனால் நம் தேவன் நீதி உள்ளவர்,சத்தியத்தை போதிக்க விடாமல் குறுக்கே தடையாக இருக்கிற எவனையும் தேவன் தூக்கி எறிவார், ஒன்று அவன் பவுலை போல் மனம் திருந்த வேண்டும்,இல்லை தடை செய்யாமல் விலகி ஓடிவிட வேண்டும்,இல்லையெனில்
தேவ கோபம் அவனுக்கு விரோதமாய் வந்தே தீரும், ஊழியங்களுக்கு தடையாக இருக்கிற என் அன்பு  உறவுகளே ! நண்பர்களே!  இது ஆவியானவர் உங்களுக்கு தருகிற எச்சரிக்கை..... உங்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது ஏனென்றால்
 உலகத்திலிருக்கிறவனிலும் எங்களிலிருக்கிறவர் பெரியவர்.

ஆமென்... அல்லேலூயா...




நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.

(1 யோவான் 4:10)

பரத்: கர்த்தர்,மனிதன் மேல் மிகவும் அன்பான சிந்தை வைத்திருக்கிறார் அது தியாகமான நேசத்தின் சிந்தை. தம்மைப்போல நம்மை மாற்றவேண்டுமென்ற
சிந்தை,நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் முதலில் அன்புகூர்ந்து இருக்கிறார்...

பிரவீன்: ஆமா அதனால தான் களி மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட மனுஷனுக்கு, தன்னுடைய சாயலையும்,ரூபத்தையும் ஆவியையும் கொடுத்தார். அந்த மனுஷனோடு ஐக்கியங்கொள்ளும்படி, பகலின் குளிர்ச்சியான வேளையிலே, அவனைத் தேடி வந்தார்.

பரத்: ஆமா ஆனால் மனிதன் பாவத்திலே விழுந்து விட்டபோதிலும்கூட, உலகத்தோற்றத்திற்கு முன்பதாகவே, மனுஷனுக்கு பாவநிவாரண பலியாக, தன்னையே ஒப்புக்கொடுத்தார்.
அதனால் தான் அப்.யோவான்,
அந்த அன்பை நினைத்து,
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் என்று சொன்னார் (யோவா. 3:16).

பிரவீன்: சரிதான்! அந்த அளவற்ற அன்பினால், தான் தேவன் பரலோகத்தைத் துறந்து, நமக்காக அடிமையின் ரூபமெடுத்தார். மனதுருக்கத்தோடு ஜனங்களின் குறைவை நிறைவாக்கினார். அசுத்த ஆவிகளைத் துரத்தி, தம்முடைய பிள்ளைகளை விடுதலையாக்கினார். அந்த அளவற்ற அன்பினால், சிலுவையை நோக்கி நடந்து, தம்முடைய ஜீவனையே கொடுத்தார்.

பரத்: ஆமா நண்பா! அவரின் ஈடுஇணையற்ற அந்த அன்பை நமக்கு உணர்த்தும்படி, “அன்புள்ள தகப்பனும், கெட்டக் குமாரனும்” என்ற உவமையை நமக்கு சொன்னார்,
தன் தகப்பனை சந்திக்க, கெட்ட குமாரன் மனபாரத்தோடு, தள்ளாடி நடந்து வந்தான். அவமானமும், நிந்தையும், குற்ற மனச்சாட்சியும் அவனை வாதித்தது.ஆனால்,
அன்புள்ள தகப்பனோ, அவனுக்கு எதிர்கொண்டு ஓடிவந்தான். கட்டியணைத்து முத்தமிட்டான்.

பிரவீன்: ஆமா நாம் ஒரு சில தருணங்களில் தவறி விழுந்தாலும், உண்மையான,மெய் மனஸ்தாபத்தோடு கர்த்தரண்டைக்கு வரும்போது, அவர் நம்மை அன்போடு ஏற்றுக்கொள்வார். நம்முடைய பாவங்களையெல்லாம் கடலின் ஆழத்தில் தூக்கியெறிந்துவிட்டு, அதை அவர் எண்ணாமலும் இருப்பார்.

பரத்: ஆமா நண்பா!
"நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்" (வெளி 1:6)

பிரவீன்: ஆமென் அல்லேலூயா  இவ்வளவு அன்பும், கிருபையும், இரக்கமும் பாராட்டுகிற தேவன் பேரில் நாம் இன்னும் எவ்வளவு அதிகம் அன்பு பாராட்ட வேண்டும்,இன்னும் நாம் கிறிஸ்துவை நம்முடைய முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும் நேசிக்க வேண்டும்,நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் முதலில் அன்புகூர்ந்து இருக்கிறார்...

பரத்: ஆமா! நண்பா! எனவே நமது வாழ்விலே எல்லா தருணங்களிலும் அவருடைய காரியங்களுக்கே முதலிடம் கொடுப்போம்,அவரிடம் ஐக்கியம் கொள்ளும் நேரத்தை முதன்மையாக்குவோம் இன்னும் அதிகமாக்குவோம்.. மற்ற எப்படிப்பட்ட  காரியங்களாக இருந்தாலும் அடுத்த இடத்தில் வைப்போம்... அவரே நம் வாழ்வில் எல்லா வேளையிலும் முதன்மையான முக்கியமான இடத்தில் இருக்கட்டும்.... நம்மை முந்தி அன்புகூர்ந்த அவர் நம்மை வாழ்வில் எல்லா ரீதியிலும் முந்த வைப்பார்,ஜெயிக்க வைப்பார்,உயர்த்தி வைப்பார்,மற்றவர்கள் மத்தியில் நம்மை முதன்மையான முக்கிய ஆட்களாக ஆக்கி அவர் நம்மை கனம் பண்ணுவார்..

ஆமென்... அல்லேலூயா....

என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
(1 சாமு 2:30)




ஆகையால்,ஏற்றகாலத்திலே
தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
(1பேதுரு 5: 6)

பரத்: மனிதன் தனக்கென்று சொந்த வழிகளையும்,தீர்மானங்களையும் உண்டாக்கி கொண்டு தன் மனம் போல்  வாழவேண்டுமென்று விரும்புகிறான்.

பிரவீன்: ஆமா தன் சுய முயற்சியால் அவன் பெரிய காரியங்களைச் செய்யமுடியும் என்று நினைத்து அவ்விதம் செயல்படுகிறான்.
ஆனால் அது அவனுக்கு ஒருபோதும் உண்மையான முழுமையான வெற்றியை பெற்றுக்கொள்ள முடியவில்லை

பரத்: ஆசீர்வாதமான காரியங்கள்
சுய பலத்தின் வழியாக வராது. உண்மையான ஆசீர்வாத வழியை
ஒரு மனிதன் பெற வேண்டுமானால் முதலாவது அவன் தேவனோடு ஒப்புரவாகப்பட்ட வாழ்க்கையை பெற்றிருக்கவேண்டும்.

பிரவீன்: கிறிஸ்து இயேசுவின்
மூலம் தேவனோடு ஒப்புரவாகாமல், அவனுடைய  பாவங்களுக்காக வருத்தப்பட்டு மனம்திரும்பாமல்
அவன் இந்த உலகத்தின் பெற்ற வெற்றிகள் எல்லாம் ஒன்றுக்குமே பயன்படாத குப்பைக்கு சமானம்.
அவனால் தன் மரணத்தை ஜெயிக்க முடியாது,மறுரூபமாக முடியாது..
நித்தியத்தில் இருக்க முடியாது..
அவர்களுக்கு எந்த நேரத்தில் என்ன நேரிடும் என்று தெரியாது..

பரத்: ஆமா ஆனால் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனோடு ஒப்புரவாக்கப்பட்ட நாமக்கு
சகலமும் நன்மைக்கேதுவாகவே
நாம் தேவனுடைய பலத்தகைக்குள்
அடங்கியிருக்கிறோம் என்று வேதம் சொல்கிறது...

பிரவீன்: அவருடய ‘பலத்த கை’ என்று சொல்லப்படுவது,சர்வ வல்லவருடைய உன்னதத் திட்டம்,அவருடைய ஞானம், வல்லமையைக் குறிக்கிறது.

பரத்: ஆம் நாம் நம்முடைய திட்டம் சிறப்பானது என்றோ,நம்மை புத்திமானென்று எண்ணக்கூடாது.... நம்முடைய ஞானம்,அறிவு நம்மை வழிநடத்தும் என்றும் எண்ணக்கூடாது அவ்விதம் எண்ணி மோசம் போனவர்கள்,கணக்கிலடங்காதவர்கள்.
அப்படிப்பட்ட கூட்டத்தில் ஒருவனாக நாம் இருப்பது தேவனுக்குப் பிரியமானதல்ல.

பிரவீன்: அதே சமயத்தில் தேவனிடத்தில் தங்களைத் தாழ்த்தி
அவருடைய கரத்தின் ஆளுகைக்கு தங்களை ஒப்புக்கொடுத்த மக்களை தேவன் அபரிமிதமான ஆசீர்வதித்திருக்கிறார்.அவர்களின் எண்ணிக்கையும் கணக்கிலடங்காது. நாம் இப்படிப்பட்ட பரிசுத்தவான்களின் கூட்டத்தில் ஒருவனாக இருப்பதே
நம்மை படைத்தவரின் விருப்பம்.

பரத்: ஆமா தேவன் தமக்கு கீழ்படிபவர்களை ஏற்றகாலத்தில் உயர்த்துவார் வரும் வரை,நாம் அவரின் வார்த்தையின் படி பொறுமையுடன் காத்திருக்கவேண்டும், அவசரப்படக்கூடாது. தேவன் அருளும் காலத்திற்க்காக காத்திருப்பவர்கள்  ஏமாந்துபோகமாட்டார்கள், தேவன் அவர்களை நிச்சயமாகவே உயர்த்துவார்,தேவன் செய்வது எதுவாக இருந்தாலும் அது மிகச்சிறந்ததாகவே அமையும். அது இரண்டாம் தரமானதாக இருக்கவே இருக்காது.

ஆமென்... அல்லேலூயா...

நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.
(சங்கீதம் 37:34)




நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்,நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். (யோவான் 15:7-8)

சுரேஷ் : தேவன்,நாம் ஜெபித்து கேட்டதையெல்லாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அது அவருக்கு மகிமையைக் கொண்டு வருகிறது.

சுகுமார் : யோவான் 15:7 இல்,
“நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” என்று வாசிக்கிறோம்.கேட்கிற எவனும் பெற்றுக் கொள்ளுகிறான்.
அவன் வார்த்தையில் நிலைத்திருந்தால்.....

சுரேஷ் : சிலர் நம்மல பாத்து கேட்கிறாங்க! கேட்கிற எவனும் பெற்றுக் கொள்ளலாம் என்று நீங்க சொல்லுறீங்க,ஆனா எத்தனையோ பேர் ஜெபத்துல கேட்டுப் பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறாங்களேனு

சுகுமார் : அதற்குக் காரணத்தை நான் சொல்றேன்,ஏன் அவங்க ஜெபத்துல கேட்டுப் பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறாங்கனா,அவங்க தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருகவில்லை,அந்த
ஜெபமே சரியில்லை....
இயேசு கிறிஸ்து தெளிவா சொல்றாரு
“நீங்கள் என்னிலும்,
என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” என்று

சுரேஷ் : ஆமா நண்பா அவங்க
பண்ண ஜெபம் உண்மையாகவே வார்த்தைகளை அடிப்படையாக கொண்ட ஜெபமாயிருந்தால் கேட்கிற எவனும் பெற்றுக் கொள்வான்.

சுகுமார் : ஆம்! எல்லாரும் கேட்டதையெல்லாம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதுதான் தேவனுடைய சித்தம் என்று 7 ஆம் வசனத்தில் சொல்லிவிட்டு, 8 ஆம் வசனத்தில், “நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார்” என்கிறார்.

சுரேஷ் : ஆமா! மிகுந்த கனிகொடுக்கிறவர்கள் என்பது ஜெபத்தில் கனிகொடுக்கிறவர்களைக் குறிக்கிறது. அதாவது,நாம்  கேட்டதையெல்லாம் பெற்றுக் கொண்டு,ஜெப வாழ்க்கையில் வெற்றி பெறுகிறவர்களாய் இருக்க தேவன் விரும்புகிறார்.

சுகுமார் : ஆமா தேவனுடைய வார்த்தையில் வேரூன்ற பட்ட மக்களிடம் நாம் அதிக ஜெப கனிகளைக் காண முடிகிறது.சிலருடைய ஜெபத்தினால் கனி உண்டாவதே கிடையாது.ஏனென்றால் அவர்கள் தேவனுடைய வார்த்தையை மிகவும் முக்கியமாக கருதவில்லை,வசனத்தை ஒழுங்கா கவனிக்கவில்லை.........

சுரேஷ்: அவர்கள் தாங்கள் எவ்வளவு நேரம் ஜெபித்தோம்,எத்தன நாள் உபவாசம் இருந்தோம்,எவ்வளவு கண்ணீர்விட்டோம்...
என்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள் தவிர கர்த்தருடைய வசனத்தின்படி நாம் வார்த்தையில் நிலைநிற்க வேண்டும் என்கிற ஆர்வம் இல்லை... அதன் விளைவு பலனற்ற கனியற்ற ஜெப நிலை....

சுகுமார்: நாம் எவ்வளவு நேரம் ஜெபித்தோம்,
எத்தன நாள் உபவாசம் இருந்தோம்,எவ்வளவு கண்ணீர்விட்டோம் என்பது முக்கியம் அல்ல,நாம் அந்த ஜெபத்தின் மூலமாக என்ன விதமான கனி நம் வாழ்வில் உண்டானது என்பதுதான் முக்கியம்.

சுரேஷ்: ஆமா சுகுமார் ! கனி இல்லையென்றால் பிதாவிற்கு மகிமை உண்டாகாது.பிதா,நாம் கனியைப் பெற்றோமா, இல்லையா என்பதைக் குறித்து நம்மைக் காட்டிலும் கரிசணை உள்ளவராக இருக்கிறார்.

சுகுமார்: ஆமா நண்பா! நாம் ஜெபத்தில் வெற்றி பெறுவது நமக்கு முக்கியம். அதை விட பிதா மகிமைப்படுவது மிகவும் முக்கியம்.

சுரேஷ்: ஆமா நண்பா! ஜனங்கள் நம்மல பார்த்து, “இவங்க தேவனிடத்தில் விரும்பி கேட்டதையெல்லாம் பெற்றுக் கொள்கிறாங்க,எப்படி ஜெபித்து பெற்றுக் கொள்வது என்பதை இவங்கல பார்த்துதான் கேட்க வேண்டும், இவங்க வணங்குகிற தேவன் கேட்டதையெல்லாம் தருகிறார்” என்று அந்த அளவிற்கு ஆச்சரியப்பட்டு, அதன் மூலம் தம்மை மகிமைப்படுத்துகிற அளவிற்கு நம்முடைய வாழ்க்கை இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.... எனவே நாம் தேவனுடைய வார்த்தையில் வேரூன்ற பட்டவர்களாய்,எல்லாவற்றிற்கும்
மேலாக வார்த்தைகளின் அடிப்படையில் ஜெபிக்கிறவர்களாய்,கிறிஸ்துவிலும்
அவரின் உபதேசத்திலும் நிலைத்திருந்து... மிகுந்த கனிகொடுத்து நம் தேவனுடைய நாமத்தை இந்த பூமியில் மகிமைப்படுத்துவோம்.....

ஆமென்... அல்லேலூயா....




சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணுங்கள்
(எபேசியர் 5:19)

டேனியல்: இசை என்பது, மனிதனின் இருதயத்தை தொடக்கூடிய ஒன்றாகும். இசையை வெறுக்கிறவர்கள் ஒருவரும் இல்லை,சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இசையை ரசிக்கிறார்கள்....

பால்ராஜ்: ஆமா!!! வசனம் சொல்கிறது,
"துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணுங்கள்"(எபே 5:18-19)

டேனியல்: ஆம் நண்பா நம் இருதயத்தில் எப்போதும் கர்த்தரை துதிக்கிற கீதம் தொனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.......

"நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்" (சங்118:15) - ல் வாசிக்கிறோம். நம் இருதயத்தில் இரட்சிப்பின் கெம்பீர சத்தமாகிய தேவனின் கீதங்கள் இருக்கும் போது,கர்த்தரின் வலதுகரம் நமது சார்பாக  பராக்கிரமஞ்செய்யும்,சத்துரு அதற்குள் வர இடமிருக்காது,அவன் தெறித்து ஓடிவிடுவான்,இப்படிப்பட்ட மேன்மையான,வல்லமையான காரியங்களலாம் கர்த்தரை துதிக்கும்
துதியின் கீதத்தில் இருக்க,ஒரு சில கிறிஸ்தவர்கள் சினிமா  இசையில் மூழ்கி இருக்கிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது....

பால்ராஜ்: ஆமா ஒரு முறை கலப்பையில் கை வைத்து விட்டால் நாம் ஒருபோதும் திரும்பி பார்க்க கூடாது,ஆனா ஒரு சிலர் லேசா திரும்பி பார்க்க ஆரம்பிக்கிறார்கள்... பாவம் அவர்கள்.....

டேனியல்: ஆமா பால்ராஜ்! கர்த்தரின் துதியை சொல்லாத அவரின் நாமத்தை உயர்த்தாத,வேத வசனத்துக்கு ஒத்துபோகாத எந்த பாடலாக இருந்தாலும் சரி,அதை யார்
இசையமைத்து பாடி இருந்தாலும்
சரி அது நமக்கு தேவையில்லை.
நமது காதையும்,மனதையும்,அதிலே செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
ஏனென்றால் சாத்தான் பக்க வழியாய் உள்ளே வர முயற்சிப்பான்,நாம் தான் விழிப்போடு இடங்கொடுக்காமல் இருக்க வேண்டும்.

பால்ராஜ்: ஆமா டேனியல் ஆனால்
நம் இதயத்தில் தேவனை துதிக்கும் பாடல்கள் இருக்கும்போது சத்துரு தன் இடத்தை காலிசெய்து ஓடுவான்
வேதத்தில் நாம் வாசிக்கிறோமே!!!! சவுலை பொல்லாத ஆவி வந்து அலைகழிக்கும்போது, தாவீது, தனது சுரமண்டலத்தை எடுத்து அதை வாசித்தபோது அவன் அமைதியானான் என்று.. (1சாமு16:23)

டேனியல்: ஆமா நண்பா நம் இதயத்திலும்,வாயிலும் தேவனை துதிக்கும் பாடல்கள் இருக்கும்போது சத்துரு தன் இடத்தை காலிசெய்து ஓடுவான்.ஆகவே நாம் எப்போதும் #கர்த்தரை #துதிக்கும் பாடல்களை பாடி தேவனை மகிமைப்படுத்திக்கொண்ட இருக்க வேண்டும் அதனால் நமக்கு அனேக நன்மைகள் உண்டு....

பால்ராஜ்: இந்த காலத்தில் ஏராளமான கிறிஸ்தவ பாடல்கள் பாடப்பட்டு,
அருமையான இசையில் இசைக்கப்பட்டு வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. கர்த்தரை துதிக்கும் பாடல்களை பாடி ஒருவருக்கொருவர்புத்தி சொல்லி கொள்ள வேண்டியும்,நம் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ண வேண்டும் என்று வேதம் போதிக்கிறது ஏராளமான நல்ல பாடல்கள் தமிழ் கிறிஸ்தவ வட்டாரத்தில் உள்ளது.அதற்காக நாம் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்....

டேனியல்: ஆம் நானும் நல்ல பாடல்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன்,ஆனால்
அதே நேரத்தில் ஒரு சிலர் தங்கள் அனுபவங்களையும்,தாங்கள் பட்ட பாடுகளையும்,தோல்வியையும்
அவிசுவாச அறிக்கைகளையும் பாடல் வரிகளாக்கி வெளியிடுகிறார்கள்
அது மக்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் பாதிப்பை உண்டாக்குகிறது....

பால்ராஜ்: ஆமா நானும் பார்த்து இருக்கிறேன்..அதுமட்டுமல்ல சிலர் தேவனின் தன்மைகள் பற்றி வேதம் என்ன போதிக்கிறது என்பதை முழுமையாக அறியாதவர்களாய்,தேவனை பற்றிய தங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை பாடுகிறார்கள் அது கொடுமையின் உச்சம்....
கர்த்தருக்கடுத்த காரியங்களை விளங்கி கொள்ள முடியாத உலகத்தனமான பாடலாசிரியர் தேவனை பற்றி தன் சுய  அனுமானங்களை பாடலாக எழுதி பாடுகிறார்கள்...

டேனியல்: ஆமா பால்ராஜ் நானும்
சில பாரம்பரிய சபைகள்ல பாடப்படும் பாடல்களை கேட்டுருக்கேன்...
வேத வசனத்துக்கு கொஞ்சம் கூட பொருந்தாத நேறய பாடல்களும் இருக்கு...அந்த பாடலை எழுதியவர் நிச்சயம் இரட்சிக்கப்பட்டவராக இருக்க மாட்டார் என்று நம்மால் அடித்து சொல்ல முடியும் அந்த அளவுக்கு மோசமான பாடல்களும் உண்டு,
தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படை இல்லாத பாடல்களால் தேவனை மகிமைபடுத்த முடியாது...

பால்ராஜ்: ஆமா! அதுமட்டுமல்ல நல்லா சத்தியங்களை மக்களுக்கு எடுத்து போதிக்கும் சில விசுவாச சபைகளில் பாடப்படும்,பாடல்களில் சில அவிசுவாச அறிக்கைகள் நிறைந்த பாடல்களும் இருக்கு நான் கவனிச்சு இருக்கேன்... தவறான அறிக்கைகள் தவறான விளைவுகளை மக்களின் வாழ்வில் உண்டாக்கிவிடும்...

டேனியல்: ஆமா நானும் கவனிச்சு இருக்கேன்!
சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
(ஏசா40:29) மனிதனுக்கு சோர்வை எற்படுத்துகிற கரியங்கள் பாடல்கள்  தேவனிடத்திலிருந்து வருவது அல்ல
பாதகமான சூழ்நிலை நேர்ந்தாலும்,
நெருக்கம் வந்தாலும்,என்று அறிக்கையிடுவது விசுவாசம் அல்ல அது அவிசுவாசமே....

பால்ராஜ்: ஆமா நண்பா! நாம் விசுவாசிக்கும் போது தேவனுடைய மகிமையை காண முடியும்,நாம் தேவனை அதிகமாக விசுவாசிக்கும் போது,தேவனுடைய மகிமை நம்  உள்ளங்களில் தங்கியிருப்பதை உணரவும் முடியும்,இப்படி  விசுவாசத்தின்  மூலம்,தேவ மகிமை  நம்மில் தங்கியிருக்கும் போது,யார் நம்மை சோர்வுற செய்ய முடியும்? அப்பரம் எதுக்கு சோர்ந்து போனாலும்,சோர்வு வந்தாலும்னு பாடனும்? என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு... இதுதான் விசுவாச அறிக்கை,இதை பாடி கர்த்தரை நாம் துதிக்க வேண்டும்.

ஆமா நம் சூழ்நிலை தலைகீழாக இருக்கும் போது என் சூழ்நிலையை மாற்றவல்ல,
இயேசு என்னோடு இருப்பதால் அஞ்சிடேன்!என அறிக்கையிட்டு அவரை நாம் ஸ்தோத்திரித்து பாட வேண்டும்...

நெருக்கமான வேளையில் நெருக்கத்தை அல்ல,என் கர்த்தர் என்னை நலமும் விசாலமான பாதையில் நடத்துவார் என்று அறிக்கையிட்டு,அவரை நாம் போற்றி பாட வேண்டும்

வனாந்திரமான வறண்ட வாழ்க்கை என்ற சூழ்நிலையில் என் வாழ்க்கையை செழிப்பாக மாற்றவும் எனக்கு வழியை உண்டாக்க,என் தேவன் வல்லவர்,
எனஅறிக்கையிட்டு அவரை நாம் பாடி மகிமைபடுத்த வேண்டும் இப்படி பட்ட துதி செலுத்துதலை தான் தேவன் விரும்புகிறார்...

டேனியல்: ஆம் நண்பா  நாம் வேதத்தில் காண்கிறோமே! சங்கீதத்தில் தாவீதின் வரிகள் எல்லாம் இப்படித்தான் இருக்கிறது தேவனை நோக்கி நேர்மறையான எதிர்பார்போடு தான் அவன் படுகிறான்.. தாவீது கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவனாக இருந்தான் (1 சாமு 13:14)
ஏனென்றால் அவன் கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்புடைய சிந்தனை சொல்,செயல்களை கொண்டிருந்தான்

பால்ராஜ்: ஆமா அவனின் பாடல்களும் கர்த்தருக்கு ஏற்புடையதாகவே இருந்தது... எனவே நாம் அவனை போல்
இருதயத்தின் ஆழத்திலிருந்து கர்த்தரை துதிக்கும்,துதி கொண்டவர்களாக வேண்டும்.
நம் இருதயம் தேவனுடைய வார்த்தைகள் அடங்கிய பாட்டினால் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும்

டேனியல்: பலருக்கு மகிழ்சி வந்தால் தேவனை துதிக்கும் பாடல்கள் நன்றாக வரும்,ஆனால் எப்போதாவது இருதயம்  துக்கத்தால் நிறைந்திருந்தால் தேவனை துதிக்கும் பாடல் வராது.ஆனால் அப்படிப்பட்டவர்களாக நாம் இருக்க கூடாது,எதிர்மறையான எல்லா காரியங்களையும் புறம்பே தள்ளி, தேவனை துதிக்கும் பாடல்களுக்கு இருதயத்திலும் வாயிலும் இடம் கொடுப்போம், மற்றவை எல்லாம் தன்னாலே மாறிப்போகும்.

ஆமென்... அல்லேலூயா...

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.

(சங்கீதம் 34:1)

======================
Revelation by spirit of God
======================