Thursday 12 July 2018



நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.

(1 யோவான் 4:10)

பரத்: கர்த்தர்,மனிதன் மேல் மிகவும் அன்பான சிந்தை வைத்திருக்கிறார் அது தியாகமான நேசத்தின் சிந்தை. தம்மைப்போல நம்மை மாற்றவேண்டுமென்ற
சிந்தை,நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் முதலில் அன்புகூர்ந்து இருக்கிறார்...

பிரவீன்: ஆமா அதனால தான் களி மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட மனுஷனுக்கு, தன்னுடைய சாயலையும்,ரூபத்தையும் ஆவியையும் கொடுத்தார். அந்த மனுஷனோடு ஐக்கியங்கொள்ளும்படி, பகலின் குளிர்ச்சியான வேளையிலே, அவனைத் தேடி வந்தார்.

பரத்: ஆமா ஆனால் மனிதன் பாவத்திலே விழுந்து விட்டபோதிலும்கூட, உலகத்தோற்றத்திற்கு முன்பதாகவே, மனுஷனுக்கு பாவநிவாரண பலியாக, தன்னையே ஒப்புக்கொடுத்தார்.
அதனால் தான் அப்.யோவான்,
அந்த அன்பை நினைத்து,
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் என்று சொன்னார் (யோவா. 3:16).

பிரவீன்: சரிதான்! அந்த அளவற்ற அன்பினால், தான் தேவன் பரலோகத்தைத் துறந்து, நமக்காக அடிமையின் ரூபமெடுத்தார். மனதுருக்கத்தோடு ஜனங்களின் குறைவை நிறைவாக்கினார். அசுத்த ஆவிகளைத் துரத்தி, தம்முடைய பிள்ளைகளை விடுதலையாக்கினார். அந்த அளவற்ற அன்பினால், சிலுவையை நோக்கி நடந்து, தம்முடைய ஜீவனையே கொடுத்தார்.

பரத்: ஆமா நண்பா! அவரின் ஈடுஇணையற்ற அந்த அன்பை நமக்கு உணர்த்தும்படி, “அன்புள்ள தகப்பனும், கெட்டக் குமாரனும்” என்ற உவமையை நமக்கு சொன்னார்,
தன் தகப்பனை சந்திக்க, கெட்ட குமாரன் மனபாரத்தோடு, தள்ளாடி நடந்து வந்தான். அவமானமும், நிந்தையும், குற்ற மனச்சாட்சியும் அவனை வாதித்தது.ஆனால்,
அன்புள்ள தகப்பனோ, அவனுக்கு எதிர்கொண்டு ஓடிவந்தான். கட்டியணைத்து முத்தமிட்டான்.

பிரவீன்: ஆமா நாம் ஒரு சில தருணங்களில் தவறி விழுந்தாலும், உண்மையான,மெய் மனஸ்தாபத்தோடு கர்த்தரண்டைக்கு வரும்போது, அவர் நம்மை அன்போடு ஏற்றுக்கொள்வார். நம்முடைய பாவங்களையெல்லாம் கடலின் ஆழத்தில் தூக்கியெறிந்துவிட்டு, அதை அவர் எண்ணாமலும் இருப்பார்.

பரத்: ஆமா நண்பா!
"நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்" (வெளி 1:6)

பிரவீன்: ஆமென் அல்லேலூயா  இவ்வளவு அன்பும், கிருபையும், இரக்கமும் பாராட்டுகிற தேவன் பேரில் நாம் இன்னும் எவ்வளவு அதிகம் அன்பு பாராட்ட வேண்டும்,இன்னும் நாம் கிறிஸ்துவை நம்முடைய முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும் நேசிக்க வேண்டும்,நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் முதலில் அன்புகூர்ந்து இருக்கிறார்...

பரத்: ஆமா! நண்பா! எனவே நமது வாழ்விலே எல்லா தருணங்களிலும் அவருடைய காரியங்களுக்கே முதலிடம் கொடுப்போம்,அவரிடம் ஐக்கியம் கொள்ளும் நேரத்தை முதன்மையாக்குவோம் இன்னும் அதிகமாக்குவோம்.. மற்ற எப்படிப்பட்ட  காரியங்களாக இருந்தாலும் அடுத்த இடத்தில் வைப்போம்... அவரே நம் வாழ்வில் எல்லா வேளையிலும் முதன்மையான முக்கியமான இடத்தில் இருக்கட்டும்.... நம்மை முந்தி அன்புகூர்ந்த அவர் நம்மை வாழ்வில் எல்லா ரீதியிலும் முந்த வைப்பார்,ஜெயிக்க வைப்பார்,உயர்த்தி வைப்பார்,மற்றவர்கள் மத்தியில் நம்மை முதன்மையான முக்கிய ஆட்களாக ஆக்கி அவர் நம்மை கனம் பண்ணுவார்..

ஆமென்... அல்லேலூயா....

என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
(1 சாமு 2:30)


No comments:

Post a Comment