Friday 24 August 2018

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

(1 தெசலோனிக்கேயர் 5:16-18)

பீட்டர்: கிறிஸ்தவர்களாகிய நாம்,எதைக்குறித்தும் கவலைப்படாமல்,
எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்,எல்லாவற்றையும் கர்த்தர் பார்த்துக்கொள்வார்,அவர் நமக்காக யாவையும் செய்து முடிக்கிற கர்த்தராக இருக்கிறார்... (சங்:138:8) எனவே நாம் எதைக்குறித்தும் கவலைப்படாமல்
இருந்து இடைவிடாமல் ஜெபம் பண்ண வேண்டும்.... அப்படிச் செய்வதே
கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

ஜான்: ஆமா கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்,அவரே எனக்காக அனைத்தையும் செய்து முடிப்பார்,என்கிற விசுவாச நிலைக்கு நாம் வரும்போது,
சந்தோஷமாக தானாக வரும்,நமது ஜெபத்தில் ஸ்தோத்திரம் வரும்,
சந்தோஷமும்,ஸ்தோத்திரமும் விசுவாசத்தின் அடையாளமாக இருக்கிறது,

பீட்டர்: ஆமா நண்பா!! நீ சொல்வது சரிதான்,
கர்த்தர் மீது அவரின் வார்தைகள் மீது அவிசுவாசப்படுகிற மனிதன்,சந்தோஷமாக இருக்க மாட்டான்,அவன் கவலையாக இருப்பான்,அவன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செய்ய மாட்டான் மாறாக,முறுமுறுப்பான்

ஜான்:ஆமா நண்பா! நாம் வேதத்தில் வாசிக்கிறோமே!!! இஸ்ரவேல் மக்கள்
சென்ற  வனாந்திரபாதையில் தேவன்
செய்த எத்தனையோ அற்புதங்களை அவர்கள்  கண்டார்கள். தேவன் உண்மையுள்ளவர் என்பதை கண்டார்கள்.தேவனின் வல்லமையை பெரிதான அளவில் கண்டார்கள். ஆனாலும் தேவனை ஸ்தோத்தரிக்கத் தவறினார்கள்.

பீட்டர்: ஆமா,ஒரு சின்ன கஷ்டம் வந்தாலும் உடனே முறுமுறுப்பதே அவர்களுடைய வழக்கமாக இருந்தது. அவர்களுடைய இருதயம் அதிருப்தியினால் நிறைந்திருந்தது.
ஆகவே முறுமுறுத்து தேவனுடைய மனிதனைக் குற்றஞ்சாட்டினார்கள்.
தேவன் அவர்களுக்கு செய்த
நன்மைகளை மறந்து,தங்கள் பழைய எகிப்தின் ஆகாரங்களையும் அவ்விதமான வாழ்க்கையையுமே வாஞ்சித்தார்கள். அவர்கள் சுதந்தரிக்கப்போகிற கானானின் மேன்மைகளை எண்ணி தங்கள் இருதயத்தை சந்தோஷத்தால் நிரப்பாமல்
சின்ன சின்ன கஷ்டம் வந்தவுடன்  முறுமுறுப்பது,எரிச்சல் அடைவது என
அவிசுவாசத்தால் தங்கள் இருதயத்தை நிரப்பினார்கள்...

ஜான்: அவர்களில் அவிசுவாசத்தால், தேவனை கோபமூட்டி அவர்களில்
அனேகர் அழிந்து போனார்கள்,(சங்78:21-22) அவர்களின் அவிசுவாசத்தினாலே கானானுக்குள் பிரவேசிக்காமல்  போனார்கள்..(எபி3:19)

பீட்டர்: ஆகவே கிறிஸ்துவுக்குள் இருக்கும்  நாம்,எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்,எல்லாவற்றையும் கர்த்தர் பார்த்துக்கொள்வார்,அவருடைய வாக்குத்தத்தங்கள் உண்மையுள்ளது,
அவர் அவற்றை எப்படியும் நம்
வாழ்வில் நிறைவேற்றுவார்,எனவே
நாம் எதைக்குறித்தும் கவலைப்படாமல் இருந்து இடைவிடாமல் ஜெபம் பண்ணுவோம்,குறிப்பாக
தேவன் நம் வாழ்க்கையில் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து அவரைத் துதித்து ஸ்தோத்தரிப்போம்,

ஜான்: பவுலும் சீலாவும் அடிக்கப்பட்டு,கட்டப்பட்டு
சரீரம் வேதனைக்குள்ளான வேளைகளில்
சிறைச்சாலையிலிருந்து,தேவனை நோக்கி ஜெபித்தார்கள்,ஸ்தோத்திரித்து துதித்து  பாடல் பாடினார்கள் கர்த்தர் அவர்களின்
வேதனையை போக்கினார்,கட்டுகளை நீக்கினார்,(அப்16:25-27) எனவே நாமும் எப்பொழுதும் எல்லா சூழ்நிலையிலும் சந்தோஷமாயிருந்து,
இடைவிடாமல் ஜெபம்பண்ணி
எல்லாவற்றிலேயும் கர்த்தருக்கு  ஸ்தோத்திரஞ்செய்யும் போது,
அவர் நம்முடைய வேதனையை போக்குவார்,கட்டுகளை நீக்குவார்,
நம்மை மென்மேலும் ஆசீர்வதித்து,
நம்மைக்கொண்டு அவரின்
நோக்கங்களை நிறைவேற்றுவார்.

ஆமென்... அல்லேலூயா...


No comments:

Post a Comment