Thursday 29 July 2021

இயேசுவே நமது முன்மாதிரி

 


#இயேசுவே #நமது #முன்மாதிரி


கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமானவர்களே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, மனுக்குலத்திற்கு தேவனால் கொடுக்கப்பட்ட முன்மாதிரி 

வாழ்க்கை முறையாக இருக்கிறது

இயேசுவைப் போலவே நாம் வாழவேண்டும் இயேசுவைப்

போலவே,நாம் மாற வேண்டும் என்பதற்காகத்தான் தேவன் நம்மை

முன் குறித்து அழைத்திருக்கிறார்.

(ரோம் 8:29) வேதம் சொல்கின்றது....

நாம் இயேசுக்கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை தொடர்ந்து 

பின்பற்றி வரும்படி அவர் 

நமக்கு மாதிரியை வைத்து போயிருக்கின்றார்.(1 பேது 2:21) கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பார்க்க வேண்டும் 

(எபி 3:1) அவர் நடந்தபடியே நாமும் நடக்க வேண்டும் (1 யோவா 2:6 ) ஏனென்றால் நாம் இந்த இருள் நிறைந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும்,எப்படி செயல்பட 

வேண்டும் என்பதற்கான,

முன்மாதிரி வாழ்க்கை முறையை அவர் நமக்கு வாழ்ந்து காண்பித்து இருக்கிறார்(யோவா 8:12)

(யோவா 13:15)


அன்பு செலுத்துவதில் இயேசு நமது முன்மாதிரி: 


ஒருவன் தன் சிநேகிதருக்காகத் 

தன் ஜீவனைக் கொடுக்கிற 

அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை என்று சொன்ன இயேசு (யோவா 15:13)

நாம் தேவனுக்கு சத்துருக்களாக இருக்கையில் (ரோம :5:10)

இயேசு நம்மை சிநேகித்தார்,

நமக்காக தன்னுடைய ஜீவனையே கொடுத்தார்,அவர் நம்மில் அன்புகூர்ந்து அதுபோல நாமும் அன்பிலே நடந்து கொள்ள வேண்டும் என்று வேதம் சொல்கிறது (எபே 5:2)


தன்னை மறுதலித்தவர்களையும், ஆபத்திலே தன்னை விட்டு விட்டு 

ஓடிப்போனவர்களையும்,இயேசு கடைசிவரை நேசித்தார் அவரின் அன்பு மாறவே இல்லை 


"தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே,முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்"

(யோவான் 13:1)


எனவே இயேசு கிறிஸ்துவை போல நாமும் நம்மை பகைவர்களையும் நிந்திக்கிறவர்களையும்,நமக்கு துரோகம் செய்கிறவர்களையும்,

நம்மை வெறுக்கிறவர்ளையும் நேசிப்போம்,அவர்கள் மீது 

இறுதிவரை அன்பு மட்டுமே செலுத்துவோம்,இப்படிப்பட்ட 

அன்பின் தன்மை கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும் என்று தான் தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்


மனத்தாழ்மையில் இயேசு நமது முன்மாதிரி:


இயேசு சொல்கின்றார்,நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள் (மத் 11:29)


கொஞ்சம் அறிவு,பணம்,படிப்பு,

திறமை இருந்தால் தன்னை கடவுளுக்கு சமமாக பாவித்து கொள்ளும்,அழிந்து போகும் தன்மை உடைய மனிதர்கள் மத்தியில் மனித உருவில் வந்த கடவுள் ஆகிய இயேசு

தன்னைத்தானே தாழ்த்தினார் வெறுமையாக்கினார்,அரியணையை விட்டு இறங்கி,அடிமையின் ரூபமெடுத்து,தனது தாழ்மையின் சுபாவத்தை நமக்கு வெளிப்படுத்தி காட்டியிருக்கின்றார்


சிலர் தன்னை தாழ்த்துவது போல் பேசுவார்கள்,அவருடைய செயல்கள் அப்படி இருக்காது,பெருமை உள்ளதாக இருக்கும், ஆனால் இயேசுவின் செயல் அப்படி அல்ல,யோவான் 13 இல் நாம் வாசிக்கிறோமே இயேசு தனது சீடர்களின் பாதங்களை கழுவுகிறார் இது அவரின் மனத்தாழ்மையான செயல்பாட்டிற்கு ஒரு அடையாளம் 

இயேசுவின் சிந்தனை,சொல்,

செயல் அனைத்தும் மனத்தாழ்மை நிறைந்ததாகவே இருந்தது,

அவர் கடவுளுக்கு சமமாக இருந்தாலும் அதை மேன்மையாக எண்ணாமல் தன்னைத்தானே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து,சிலுவை மரணத்தை ஏற்கும் படியாக தன்னைத்தானே தாழ்த்தினார்.

எனவே தான் தேவன் அவரை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தினார்,(பிலிப்பியர் 2:5) சொல்கிறது கிறிஸ்து இயேசுவிலிருந்த 

சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;


மன்னிப்பதில் இயேசு நமது முன்மாதிரி:


தன்னுடைய மரணத் தருவாயில் கூட தன்னை துன்பப்படுகிறவர்கள் இயேசு மன்னித்தார்,அதோடு மட்டுமல்லாமல் அவர்களை தேவன் மன்னிக்கும் படியாக,பிதாவே இவர்களை மன்னியும் என்று அவர்களுக்காக வேண்டுதலும் செய்தார் (லூக் 23:34)

வேதாகமம் நம்மையும் அவரைப் போலவே மன்னிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது


"கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல,ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்"(கொலோ 3:13)


"மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்".(மத் 6:14)


மனதுருக்கத்தில் இயேசு நமது முன்மாதிரி: 


மக்களுக்கு நல்வழி காட்ட இயேசு மனதுருகினார்: 


இயேசு கரையில் வந்து,அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.(மாற் 6:34)


நோயாளிகள் படும் வேதனையைப் பார்த்து மனதுருகி அவர்களை குணமாக்கினார்:


"இயேசு வந்து, திரளான 

ஜனங்களைக் கண்டு,அவர்கள்மேல் 

மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்".(மத் 14:14)


மரித்துப்போன ஒரே மகனின் சடலத்தோடு பாடிக்கு பின்னே அழுது கொண்டு சென்ற விதவைத் தாயின் மீது இயேசு மனதுருகி உதவி செய்தார்

அவனை உயிரடையச் செய்தார்:

(லூக் 7:14-15)


இயேசுவைக் கொலை செய்ய பிடிக்க வந்த பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின்,வெட்டப்பட்ட காதை இயேசு மனதுருகி ஒட்ட வைத்தார் (லூக் 22:50-51)


எனவே நாமும் இயேசுவை அறியாத மக்களை கண்டால் அவர்கள் மீது மனதுருகி அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்து அவர்களை நல்வழிப்படுத்த

வேண்டும்,வியாதியஸ்தர்களுக்காக  

நாம் ஜெபிக்கவும்,அவர்களை இயேசுவின் நாமத்தினால் குணமாக்கவும் விசுவாசத்தோடு செயல்படவேண்டும்,

பாவத்தினாலும்அக்கிராமத்தினாலும்,

மரித்து கிடக்கின்றவர்களை,

தேவனுடைய வார்த்தையை அறிவித்து அவர்கள் உயிர்மீட்சி அடையவும் உயிர் அடையவும் செய்ய வேண்டும்.


நன்மை செய்வதில் இயேசு நமது முன்மாதிரி: 


மற்றவர்களுக்கு நன்மை செய்வதையே தன்னுடைய இயல்பாக ஏற்றுக் கொண்டிருந்தார், எல்லோருக்கும் பாரபட்சமின்றி நன்மை செய்யுங்கள் என்று போதித்தார் (லூக் 6:35) 

தீமை செய்தவர்களுக்கும் 

நன்மை செய்யும்படியாக 

கட்டளையிட்டார்: (மத் 5:44)

தன்னை எதிர்த்த எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் கூட அவர் 

நன்மை செய்தார்,ஒருவருக்கும் 

அவர் தீமை செய்யவே இல்லை


அப்போஸ்தலர் 10:38 சொல்கிறது

அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார் என்று அவருடைய முழுநேர வேலையே மற்றவர்களுக்கு நன்மை செய்வதுதான்,

நாமும் கூட நன்மை செய்வதற்காகத்தான் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக பிடிக்கப்பட்டு தேவனுடைய செய்கையாக இருக்கின்றோம் இருக்கின்றோம் 

(எபே 2:10) எனவே நன்மைகள் மாத்திரம் செய்வதே நம்முடைய முழுநேரப் பணியாக இருக்கட்டும்


சுயத்தை வெறுப்பதில் இயேசு நம்முடைய முன்மாதிரி: 


இயேசுவினுடைய பேச்சும் பிரசங்கமும் அவரின் சுயத்தில் இருந்து வந்ததல்ல

பிதாவினிடத்தில் இருந்து வந்தது,

அவர் சுயமாக எதையும் பேசாமல் பிதா அவருக்கு போதித்த படியே அவர் பேசினார்,போதித்தார் (யோவா 8:28)

எனவே நாம் சுயத்தில் இருந்து, பிரசங்கத்தில் ஏதாவது பேசாமல் தேவன் நமக்கு போதித்த வேத வாக்கியங்களின் அடிப்படையில் பேச வேண்டும் 

பிரசங்கிக்க வேண்டும்.


இயேசு தனது சுயத்தை வெறுத்தது போல நாமும் நம்முடைய சுயத்தை வெறுத்து  நமது சிலுவையை எடுத்துக் கொண்டு அவரை பின்பற்றி வரவேண்டும் 

(மாற்கு 8:34)


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சுயமாக எல்லாவற்றையும் செய்யும் அதிகாரமும் சுதந்திரமும் வல்லமையும் உடையவராக இருந்தாலும், அவர் சுயமாக எதுவும் செய்யவில்லை சுயமாக எதுவும் பேசவில்லை, அது மட்டுமல்ல ஒரு மனிதனாக இந்த பூமிக்கு சுயமாக வரவில்லை மாறாக பிதாவே அவரை அனுப்பினார்,பிதா அனுப்பி அவர் 

வந்தார்(யோவா 12:49-50) அவர் தன்னுடைய சித்தத்தை செய்யவில்லை பிதாவினுடைய சித்தத்தை செய்தார் (யோவா 5:30) எனவே நமக்கு எதையும் செய்யவும், எதையும் பேசவும் நமக்கு அதிகாரம் இருந்தாலும்,தேவன் நமக்கு சொல்லுகிறதை பேசவும்,தேவன் நமக்கு கட்டளையிடுகிறதை

செய்கிறவர்களாக நாம் இருக்க

 வேண்டும்.(யோவா 7:18) இல் 

இயேசு சொல்கின்றார்....


"சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான்,

தன்னை அனுப்பினவரின் 

மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான்"

என்று...


இயேசு தனது செயல்பாடுகளின் 

மூலம் ஒருபோதும் சுய மகிமையை தேடவில்லை,பிதாவை மகிமைப்படுத்தும் படியாகவே நாடினார்.. எனவே நாமும் நம்முடைய செயல்பாடுகளின் மூலம்,சுய மகிமையை தேடாமல் தேவனை மகிமைப்படுத்த வேண்டும்.


இயேசு தன்னுடைய வாழ்க்கையில் எல்லா பகுதியிலும் தன்னை முன்னிலைப்படுத்தாமல்,தனது பிதாவே முன்னிலைப்படுத்தி அவருடைய நாமம் மகிமைப்படும்படி ஒவ்வொன்றையும் செய்தார் என்பது அவர் சுயத்தை எவ்வளவு வெறுத்து செயல்பட்டு இருக்கிறார் என்பதை நம்மை உணர வைக்கின்றது..


உண்மையில் நாம் சுயத்தை வெறுக்கிற மனிதர்களாக இருந்தால் நம்முடைய வாழ்க்கையில்,இயேசுவை முழுமையாக பிரதிபலிக்க முடியும், நாம் நமக்கான சுய அடையாளங்களை அதாவது

கோபக்காரன், பிடிவாதக்காரன்

சண்டைக்காரி,வாயாடி,என்கிற சுயத்தை அழிக்கும் போது தான் கிறிஸ்துவை நம்மால் வெளிப்படுத்த முடியும்,


"அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.(யோவா 3:30)"


தீண்டாமைக்கு எதிரான நடவடிக்கையில் இயேசு நம்முடைய முன்மாதிரி : 


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இடத்திலிருந்து நாம் கற்கவேண்டிய அடுத்த பண்பு,அவர் தீண்டாமைக்கு எதிரானவர்,யூதர்கள் தங்களை மிகவும் உயர்ந்தவர்களாகவும் மற்றவர்களை மிகவும் கீழான வர்களாகவும் எண்ணினார்கள், ஆகையால் யூதரல்லாதவர்களை, திருமணம் செய்தவர்களை புறக்கணித்து 

அவர்களை சமாரியர்கள் என்று அழைத்தார்கள்,யூதேயா மாகாணத்திலிருந்து கலிலேயா மாகாணத்திற்கு செல்ல வேண்டுமென்றால்,சமாரியா வழியாககடந்து செல்வதை தவிர்த்து 

சுற்றி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் சமாரியர்களை யூதர்கள் தீட்டாக கருதினார்கள்.


ஆனால் ஆண்டவர் இயேசு அதை உடைத்தெறிய சமாரியாவின் வழியாக

சென்றார்,அதுமட்டுமல்ல சமாரியாவிலே,இரண்டு நாள் தங்கி அவர்களுக்கு போதனையும் செய்தார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தீண்டாமைக்கு எதிராக தீயை ஆண்டவராகிய இயேசு பற்றவைத்தார்

(யோவா 4:4-43)


தேவனிடத்தில் பாரபட்சம் இல்லை

எந்த மனிதனாக இருந்தாலும் அவன்

நன்மை செய்தால் அதற்குரிய 

பலனும், அவன் தீமை செய்தால் அதற்குரிய தண்டனையும் உண்டு 

இதில் இனப்பாகுபாடு,மொழிப் பாகுபாடு,நிறப்பாகுபாடு என

எந்தவித பாகுபாட்டையும் தேவன் பார்ப்பதில்லை.


பொல்லாங்குசெய்கிறவனுக்கு

உபத்திரவமும் வியாகுலமும், நன்மை செய்தவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும் (ரோமர் 2:9-11)


அவருக்கு முன்பாக நாம் அனைவரும் சமமே உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்பதை பிறப்பு அல்ல குணமே தீர்மானிக்கும் என்று வேதம் போதிக்கின்றது 


"எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்".(அப் 10:35)


தேவனோடு உறவாடுவதில் இயேசு நமது முன்மாதிரி 


யோவான் 8:16 இல் இயேசு சொல்கின்றார்......


"நான் நியாயந்தீர்த்தால்,என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்;ஏனெனில்

நான் தனித்திருக்கவில்லை,நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்."


இயேசு பிதாவோடு தனித்து உறவாடுவதில் தலைசிறந்தவராய் இருந்தார்,பிதா தந்த பொறுப்புகளை நிறைவேற்றிக் கொண்டே தனிப்பட்ட உறவில் பிதாவோடு நெருக்கமாக வாழ்ந்தார்,பொறுப்புகளை காரணம் காண்பித்து, பிதாவோடு நேரம் செலவழிப்பதை அவர்  தவிர்க்கவில்லை...பகல் நேரம் முழுவதும் ஊழியம் செய்துவிட்டு 

இரவு முழுவதும் ஜெபித்தார்..

(லூக்கா 6:12)


வேலைப்பளுவை நான் காரணம் காட்டி,வேதம் வாசிப்பதையும்,ஜெபம் செய்வதையும் நாம் விட்டு விட்டு 

அதை தவிர்க்கிறோம்,ஆனால் இயேசு தேவனோடு உறவாட மிகவும் 

பிரியப்பட்டார், அதிகாலையிலே வெளிச்சம் வருவதற்கு முன்பாகவே இயேசு எழுந்து ஜெபிக்கிறவராய் காணப்பட்டார் (மாற்கு 1:35)


ஆகையால் தான் இயேசு சொல்கிறார் நான் தனித்திறன் பிதா எப்போதும் என்னோடு இருக்கிறார், அவருக்கு பிரியமானவர்களே நான் செய்கிற படியால் அவர் என்னை தனித்திருக்க விடவில்லை (யோவா 8:29)


எனவே நாம் தேவன் நமக்கு கொடுத்த ஊழியத்தை, வேலையை காரணம் காட்டி அவரோடு உறவாடுவதை தவிர்க்காமல் இயேசுவைப் போல

பிதாவோடு அதிகமாய் ஐக்கியம் கொள்வதை ஆர்வமாய் நாடுவோம்.


சவால்களை சந்திப்பதில் இயேசு நமது மாதிரி:


மத்தேயு 26:46 இல் இயேசு சொல்கின்றார்..."என்னைக் காட்டிக்கொடுக்கிறவன்,இதோ,வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம்"


இயேசு சவால்களைக் கண்டு பயந்து நடுங்க வில்லை,அவர் தைரியமும் விசுவாசம் உள்ளவராக இருந்தார்

எபிரெயர் 12:2 சொல்கிறது...

"அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து,தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்."


ஆகையால் தான் நமது வாழ்வில் சவால்களை பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பொழுது

ஏதோ புதுமை என்று அதாவது யாருக்கும் வராதது எனக்கு வந்துவிட்டது,என்று நான் பயந்து விடாமல் அதை துணிந்து எதிர் கொள்ள வேண்டும்,அந்த சவால்களை பிரச்சனைகளை இயேசுவைப் போல மேற்கொண்டு ஜெயிக்க வேண்டும்.

என்று தேவனுடைய வார்த்தை 

நம்மை உற்சாகப்படுத்துகிறது


"பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,

கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்"

(1 பேதுரு 4:12-13)


நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடமிருந்து இன்னும் அனேக காரியங்களை முன்மாதிரியாக நாம் கற்றுக்கொள்ள முடியும்,ஏனெனில் அவரே நமக்கு பூரணமான முன்மாதிரியாக இருக்கின்றார்,அவரது அடிச்சுவடுகளை பின்பற்ற நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் 

(1 பேது 2:21) அவரை கவனித்து பார்த்து (எபி 3:1) அவர் நடந்தபடியே நடக்கிறவர்களாக என்றும் 

இருப்போம் (1யோவா 2:6)


ஆமென்... அல்லேலூயா...


Pas.Marvel Jerome 

Calvary Living Way Ministries

Mobile number: 9677819582 







No comments:

Post a Comment