Wednesday 3 November 2021

சமாதானமாயிருங்கள்

சமாதானமாய் இருங்கள்: 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாம் சமாதானமாக இருக்க வேண்டிய மூன்று பகுதிகள் உள்ளது.

i)சர்வவல்லவரோடு சமாதானம்
ii)சக மனிதர்களோடு சமாதானம்
iii)சுயத்துடன் சமாதானம்

1) சர்வவல்லவரோடு சமாதானம்:

பிரியமானவர்களே! 
நாம் சமாதானமாக இருக்க வேண்டிய,முதல் நபர் நம்மை படைத்த தேவன்,
நாம் அவரோடு சமாதானமாக இருக்க வேண்டியது (அதாவது) அவருக்கும் நமக்குமான உறவு சீராக இருக்க,வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
நாம் செய்கிற பாவங்கள், கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவில் சமாதானக் குலைச்சலை ஏற்படுத்துகிறது.

இதோ,இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.(ஏசாயா 59:1-2)

மனிதர்கள் செய்த பாவங்களிலிருந்து மனம் திரும்பாமல் இருந்தால் அது அவனுடைய வாழ்க்கையிலே, சமாதானம் இன்மையை கொண்டு வருகிறது. அவன் ஜெபிக்கிற ஜெபத்திற்கு பதில் வராது, ஆனால் அவன் மனம் திரும்பினால் அவன் பாவங்கள் மன்னிக்கப்படும், அவன் வாழ்வு நன்மையால் நிறைந்திருக்கும் (ஏசாயா 1:15-19)

பரிசுத்தமும் நீதியுமுள்ள கடவுளால்,பாவத்தோடு உள்ள மனிதனோடு உறவு கொண்டாட முடியாது (சங் 7:11) ஆயினும் தேவன் நம்மோடு உறவுகொள்ள, சமாதானமாக இருக்க விரும்புகிறார்,நமக்கும் கடவுளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த அவருடைய குமாரனும் 
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை,இந்த பூமிக்கு அனுப்பி,நம் சார்பாக அவரின் ஒரே பேரான குமாரனை பலியாக்கினார்.(ஏசா 53:10)
(யோவா 1:29)(எபே 2:13-19)

பாவங்கள்,தேவனுக்கு எதிரானவை தேவனும் பாவத்திற்கு எதிரானவர்,
ஒரு மனிதன் பாவத்தை 
செய்யும் போதும்,அந்த 
நபர் தேவனுக்கு எதிரானவராக ஆகின்றார்,ஆகிலும் பாவத்தை வெறுக்கின்ற தேவன்,
பாவிகளை நேசிக்கிறார்
அவர்களை இரட்சிக்க விரும்புகின்றார்..

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். (1தீமோத்தேயு 1:15)(1 தீமோ 2:4)

ஆம் பிரியமானவர்களே நாம் அந்தரங்க பாவங்களை வெறுத்து,
பரிசுத்தமாகுதலை பூரணப்படுத்த
வாழும்போது,தேவனோடு சமாதானமாக இருக்க முடியும். தேவனுக்கும் நமக்கும் உள்ள உறவு மென்மேலும் வலுப்பெறும்.

உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.
நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
(1 பேதுரு 1:15-16)

இப்படிப்பட்ட 
வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.
(2 கொரிந்தியர் 7:1)

தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
(1 தெசலோ4:7)

இந்த உலகத்தினை பிசாசானவன்,பாவத்தினால் நிறைத்து வைத்துள்ளான் 
பாவம் செய்வதை மனிதர்களுக்கு இயல்பான ஒன்றாக மாற்ற முயல்கிறான்,ஆயினும் மனிதனுடைய இயல்பு பாவத்திற்கு எதிரானதாகும் ஏனெனில் மனிதன் 
தேவசாயலில் படைக்கப்பட்டு இருக்கிறான் (ஆதி 1:26,27) ஆகையால் மனிதன் பாவம் செய்யும் போது,தன் இயல்புக்கு எதிராக செயல்பட்டு தனக்கு கொடுக்கப்பட்ட தேவ சாயலை, மகிமையை இழக்கின்றான் (ரோம 3:23) மனிதன் தான் 
செய்த பாவத்திலிருந்து மனம் திரும்பி திருமுழுக்கு பெற்று கொள்வதினால் இழந்த மகிமையை மீட்க தேவன் உண்டுபண்ணின வழிக்கு வருகின்றான். தனது 
மெய்யான சாயலை தரித்துக் கொள்கின்றான்.

அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட 
புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
(எபேசியர் 4:22-24)

மேலும் இந்த நிலையிலேயே மனிதன் நிலைத்திருக்கும் போது மகிமையிலே நிலைத்திருக்கவும் தேவனோடு சமாதானமாகவும் இருக்கவும் முடியும் (எபே 4:25-32)

2) சக மனிதர்களோடு சமாதானம்

அடுத்து நாம் சக மனிதர்களோடு சமாதானமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக சபையோடு அதாவது தேவனுடைய பிள்ளைகளோடு இரட்சிக்கப்பட்ட அவர்களோடு நாம் சமாதானமாய் இருக்க வேண்டும் என்று வேதம் போதிக்கிறது.

சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
(1 கொரிந்தியர் 1:10)

ஆனாலும் இரட்சிக்கப்பட்ட சகோதரனோ சகோதரியோ பாவத்தில் நிலை கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களை மனம் திரும்புதலுக்கு நேராக வழி நடத்தும் படி, அவர்களை விட்டு விலகி 
இருக்க வேண்டும் என்று 
வேதம் சொல்கிறது....

நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.
(1 கொரிந்தியர் 5:11)

மேலும் கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கை உபதேசத்தில் நிலை கொண்டிராமல், மாற்றுப் போதகம் கள்ள உபதேசம் செய்கிறவர்களை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது...

கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.
அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.
(2 யோவான் 1:9-11)

மற்றபடி கிறிஸ்துவின் இரத்தத்தினாலே,பாவமன்னிப்பு சென்று திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவருமே, சமாதானத்துடன் இருக்க வேண்டும் கோபம் வெறுப்பு கசப்பான வைராக்கியம் போன்றவற்றை தூக்கி எறிய வேண்டுமே தவிர அவைகளை தூக்கி சுமக்க கூடாது. சமாதானத்திற்கு எதிரான மனமும் சிந்தனையும் ஞானமும் தேவனுடையது அல்ல என்பதை நினைவில் கொள்ளவும் 
(யாக் 3:14-17) மேலும் 
நாம் சமாதானத்தினை விதைக்கிறவர்களாக (அதாவது)
சமாதானத்தை ஏற்படுத்துகிற தேவனுடைய புத்திரர்களாக இருக்கவேண்டும் என்று வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது.. (மத் 5:9)

கிறிஸ்துவின் இரத்தத்தினாலே மீட்கப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவர்களும்
உலகத்தாரோடு (அதாவது) இரட்சிக்கப்படாதவர்களோடு 
சமாதானமாய் இருப்பது முக்கியமே...
ரோமர் 12:18...சொல்கிறது..
"கூடுமானால் உங்களாலானமட்டும் 
எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்."

நாம் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும்,ஆனால் அனைத்திலும் சமாதானமாக உலகத்தாரோடு ஒத்துப்போக முடியாது,தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் புறக்கணித்து
திருமணம் மற்றும் பிற உலக வழிபாடுக்களுக்காக அவர்களுடன் சமரசம் செய்து கொள்ள முடியாது, நாம் இன்று தேவனுடைய பிள்ளைகளாக இருக்கின்றோம் நமக்குத் தகுதியானவைகளை மட்டுமே 
நாம் செய்ய வேண்டும்,என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்..

எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.(1 கொரிந்தியர் 10:23)

சுயத்துடன் சமாதானம்:

அடுத்ததாக எனக்கு நானே சமாதானமாக,இருக்க வேண்டும் சுய சமாதானம் மிக முக்கியம் நாமே நமக்குள் சமாதானமாக இருக்க வேண்டும் ஏனெனில் நான் சமாதானமாக இருந்தால்தான் மற்றவர்களிடத்தில் சமாதானத்தை உண்டாக்க விதைக்க முடியும்,நான் சமாதானமற்று இருக்கும் பட்சத்தில் எரிச்சலை விதைக்கிறவன் ஆக இருப்பேன்.

சுய சமாதானம் பெற நான் இரண்டு காரியங்களை செய்ய வேண்டும்...

1) குற்ற உணர்வுகளை விட்டு வெளிய வர வேண்டும் 

நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு இருக்கின்ற பிரச்சனை குற்றத்தை விட்டு வெளியே வந்தாலும்,குற்ற உணர்ச்சியை விட்டு வெளியே வராமல் இருப்பது தான்,நான் மனம் திரும்பி உண்மையாக தேவனிடத்தில் திரும்பின பட்சத்தில் அவர் நம் பாவங்களை முற்றிலும் மன்னித்து விட்டார் என்று விசுவாசியுங்கள்,
சத்துருவானவன்,நாம் செய்த பாவங்களை நினைவுபடுத்தி நம்மை சோர்வடையச் செய்வான்
நாம் மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளை தரவிடாமல் தடுப்பதே அவனது பிரதான நோக்கமாய் இருக்கிறது.ஆகையால் தேவன் மன்னித்து விட்டார் என்பதை முழுமையாக அவருடைய வசனத்தின்படி விசுவாசிப்போம் தேவனுடைய பார்வையில் மன்னிப்பு என்பது டெலிட் என்பதாக உள்ளது அதாவது 
நான் மனதார மன்னிப்பு கேட்டு முழுமையாக மனம் திரும்பும் பட்சத்தில் அவர் அந்த பாவங்களை அழித்து விட்டார் என்பது பொருள்... 

ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
(எபிரெயர் 8:12)

கடவுளே மறந்த ஒன்றை நாம் 
ஏன் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.. சற்று யோசியுங்கள் அந்தப் பாவங்களை குறித்த எச்சரிக்கை உணர்வு நமக்கு இருக்கவேண்டும் ஆனால் குற்ற உணர்வு இருக்க கூடாது...

2)அடுத்ததாக பாரமான யாவற்றையும் பரமனிடம் ஒப்படையுங்கள்..

நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
(பிலிப்பியர் 4:6-7)

நம்மால் அவைகளை தூக்கி சுமக்க முடியாது,என்று தேவன் அறிந்த படியினாலே அவைகளை அவர் மேல் வைத்துவிட சொல்கின்றார்....( சங் 55:22) ஆகையால் நாம் பாரமான எல்லாவற்றையும் அவரிடத்தில் ஒப்படைத்து விடுவோம்,அவர் நமக்காக எடுக்கின்ற முடிவுகள் நிச்சயம் சிறந்ததாக இருக்கும் என்பதை நினைவில் கொள்வோம்... 

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; 
அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.(எரேமியா 29:11)

இறுதியாக தேவன் நம்மை சமாதானமாக இருக்கும் படியாகவே அழைத்திருக்கிறார் 
(1கொரி 7:15) நமது ஆண்டவர் அவருடைய சமாதானத்தையே நமக்குத் தந்திருக்கிறார் (யோவா 14:27) பரிசுத்த ஆவியானவர் நமக்கு தேற்றரவாளன் ஆக இருக்கின்றார் (யோவா 14:26) அதை நன்கு உணர்ந்தவர்களாய் நம்மிலும்,நம்மை சுற்றிலும் நம்மை படைத்தவரோடும், சமாதானமாக இருப்போம் 
இந்த தெய்வீக முயற்சியிலும், பயிற்சியிலும் வெற்றிபெற எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் பெற கர்த்தருடைய ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக...

ஆமென்... அல்லேலூயா..

சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.
(2 தெசலோனிக்கேயர் 3:16)

Pas.Marvel Jerome 
Clw Ministries

No comments:

Post a Comment